| |
சடம் கொடு விண்
உறை தளங்கள் தாழ்தலும்,
கடம் கொடு பல் இயம் கறங்கிப் பாடலும்,
இடம் கொடு சூழ்தலும் கண்டு, உள் இன்பு அல்
புடம் கொடு கடல் பெருக்கு எடுத்து, உள் புக்கு உளான். |
வானில் வாழும்
வானவர் படையணிகள் உடலெடுத்துக் கொண்டு
வந்து மரியாளை வணங்குதலையும், கடம் முதற் கொண்டு பல இசைக்
கருவிகள் முழங்கிப் பாடுதலையும், இடம் பிடித்துக் கொண்டு அவ்வானவர்
புடைசூழ்ந்து நிற்றலையும், சூசை கண்டு, தன் உள்ளத்துள் இன்ப
அலையைப் புறத்தே கொண்டு மகிழ்ச்சிக் கடல் பெருக்கெடுக்க, தான்
அதனுள் புகுந்த தன்மையன் ஆயினான்.
| 90 |
கண்குடித்
தனவொளி கிளர்த்த காட்சியா
னெண்குடித் துவந்தகண் ணிமைப்பி லாமையும்
வண்கொடித் துணரலர் வாடி லாமையும்
விண்குடித் தகைமையால் விளங்கித் தோன்றினான். |
| |
கண் குடித்தன
ஒளி கிளர்த்த காட்சியான்
எண் குடித்து உவந்த கண் இமைப்பு இலாமையும்,
வண் கொடித் துணர் அலர் வாடு இலாமையும்,
விண் குடித் தகைமையால் விளங்கித் தோன்றினான். |
தன் கண்களால்
பருகிய ஒளி மிக்க அக்காட்சியைப் பெற்ற சூசை,
எண்ணத்தைக் கடந்த விதமாய் மகிழ்ந்த அக்கண்கள் இமைகொட்டுதல்
இல்லாமையாலும், வளமான தன் மலர்க் கொடியிலுள்ள கொத்தான
பூக்கள் வாடாமையாலும், விண்ணுலகத்தைத் தம் குடியிருப்பாகக்
கொண்ட அமரருக்குரிய மேன்மையோடு விளங்கித் தோன்றினான்.
அமரர்
என்பது தேவருக்கும் வானவருக்கும் உரிய பெயர். 'கண்
இமைத்தலால் அடிகள் காசினியில் தோய்தலால், வண்ண மலர்மாலை
வாடுதலால் - எண்ணி, நறுந்தாமரை விரும்பும் நன்னுதலே அன்னாள்,
அறிந்தாள் நளன்றன்னை ஆங்கு', என்று நளவெண்பா (153)
குறிப்பிடுவதுபோல், நம் நாட்டு மரபையொட்டி, கால்கள் தரை
தோயாமை ஒன்றை மட்டும் விலக்கி, ஏனைய இரண்டாலும் சூசையை
வானவனுக்கு நிகராக்கிக் காட்டுகின்றார் ஆசிரியர். குடித்தன -
குடித்த; பெயரெச்சம் இடையே 'அன்' சாரியை பெற்று நின்றது. |