பக்கம் எண் :

முதற் காண்டம்520

               91
இன்னிழ லிவரிய விழைபொற் பூணினா
டன்னிழ லொடுங்கநான் றகும ணத்திடை
மன்னிழ லெழுங்கொடி வகுத்த தாமென்றான்
மின்னிழ லுடன்புனல் விளைக்குங் கண்ணினான்
 
'இன் நிழல் இவரிய இழை பொன் பூணினாள்
தன் நிழல் ஒடுங்க நான், தகு மணத்திடை
மன் நிழல் எழும் கொடி வகுத்தது ஆம்!' என்றான்,
மின் நிழலுடன் புனல் விளைக்கும் கண்ணினான்.

     மின்னல் ஒளியோடு கண்ணீரையும் ஒருங்கு தோற்றுவிக்கும் கண்களை
உடைய சூசை, 'இனிய ஒளியைப் பரப்பிய மணிகள் இழைத்த பொன் அணி
போன்ற மரியாளின் நிழலில் நான் ஒதுங்கி நலம் அடையும் வாய்ப்பை,
நிலையான நிழலோடு எழும் இம்மலர்க் கொடியே தகுதி வாய்ந்த
திருமணத்தின் மூலம் எனக்குத் தந்துள்ளது!' என்று நினைந்தான்.

     இக்கண்ணீர் மகிழ்ச்சிக் கண்ணீர் எனவும், பூணினாள் நிழலும்,
கொடி நிழலும் ஆதரவு குறிப்பதாகவும் கொள்க.

 
                92
உன்னிய வுவகையோ டுருகி யின்பறா
மின்னிய முகில்துளி விட்டெ னாமிளிர்
கன்னிய விழிமழை கான்று கான்றுயர்
துன்னிய புயமலை துளங்கத் தோன்றினான்.
 
உன்னிய உவகையோடு உருகி, இன்பு அறா
மின்னிய முகில் துளி விட்டு எனா, மிளிர்
கன்னிய விழி மழை கான்று கான்று உயர்
துன்னிய புய மலை துளங்கத் தோன்றினான்.

     இவ்வாறு நினைந்த மகிழ்ச்சியோடு உள்ளம் உருகி, இன்பம் நீங்காமல்,
மின்னிய மேகம் மழைத் துளியைச் சொரிந்தாற் போல, ஒளி பொருந்திய
பழுதற்ற தன் கண்களினின்று மழை போல் நீரைப் பொழிந்து பொழிந்து,
உயர்ந்து நின்ற தன் இரு தோள்களாகிய மலைகள் பொலிவுடன் விளங்கத்
தோன்றினான்.

     கன்னிய - கன்னிக்கு நிகரான: பழுதற்ற.