| 93 |
மன்னென
மணத்திடை யமைந்த மாதுபோய்
மின்னென மிளிர்ந்துயர் மேவி மீள்கிலா
தன்னென விசும்புறி னிவட ணந்தநான்
பின்னென செய்வதென் றுளத்திற் பேணினான். |
| |
'மன் என மணத்திடை
அமைந்த மாது போய்,
மின் என மிளிர்ந்து உயர் மேவி, மீள்கு இலா,
தன் என விசும்பு உறின், இவள் தணந்த நான்
பின் என செய்வது?' என்று உளத்தில் பேணினான். |
'நிலைபேறு
உடையதாகத் திருமணத்தின் மூலம் எனக்கு மனைவியாய்
அமைந்த இப்பெண் விலகிப்போய், மின்னல்போல் ஒளிர்ந்து உயரே
சென்றுள்ளாள். அவள் மீளுதல் இல்லாமல், தன் இடம் அதுவேயென
வானத்தில் நிலைத்து விடுவாளாயின், இவளைப் பிரிந்த நான் அதன்பின்
செய்வது யாது?' என்று தன் மனத்துள் ஆராய்ந்தான்,
| 94 |
உந்துதே
ரெனநசை யுகப்பி லேறினள்
நொந்துதே ரரும்புவி யிடுக்க ணூக்குசூல்
நந்துதே றியநய னல்க மீட்டிவண்
வந்துதே றுவளென மனத்திற் றேறினான். |
| |
உந்து தேர் என
நசை உகப்பில் ஏறினள்,
நொந்து தேர் அரும் புவி இடுக்கண் நூக்கு சூல்
நந்து தேறிய நயன் நல்க, மீட்டு இவண்
வந்து தேறுவள்!' என மனத்தில் தேறினான். |
'தூண்டப்பட்ட
தேர் போல் மேலுலகின்மீது கொண்ட ஆசையால்
உயரத்தில் ஏறி நின்ற இவள், நொந்து தேடிக் கொண்டிருக்கும்
இம்மண்ணுலகின் அரிய துன்பத்தை நீக்கக் கூடிய தன் கருப்பத்தால்
பெருகும் தெளிந்த நன்மைகளை வழங்கும் பொருட்டு, மீண்டும் இங்கு
வந்து தங்குவாள்!' என்று தன் மனத்துள் தேறினான். |