பக்கம் எண் :

முதற் காண்டம்52

     மலைகள் கார்மேகத்தோடு நேரே போர் செய்து நிற்கும்; பொழியும்
மழையோடு ஈவோர் கைகள் போர் செய்து நிற்கும். அணிகலன்கள்
மாலைகளோடு நேரே போர் செய்து நிற்கும்; அகன்ற மார்போடு மாலைகள்
போர் செய்து நிற்கும். வண்டிகள் பூமியோடு நேரே போர் செய்து நிற்கும்.
குளிர்ச்சி தரும் பாலோடு பாக்களின் இனிமை போர் செய்து நிற்கும்.
சோலை செல்வங்களோடு போர் செய்து நிற்கும்; செழுமையான வான்
வீட்டோடு அச்செல்வங்கள் போர் செய்து நிற்கும்.

     இங்குக் குறித்த போரெல்லாம் ஒன்றினொன்று விஞ்ச முயலும் இன்பப்
போட்டியென்று கொள்க. 'பொரும்' என்றது பொருதும் என்று சாரியை
பெற்றது.

                        69
காலையொ ளிர்ந்துளி மொட்டிதழ் விண்டக டிக்கம லந்தவிசின்
சூலையுளைந்தொளிர் முத்துசொ ரிந்தவ ளைக்குல நின்றிரிய
மாலையு றைந்துளி பொற்சிறை வந்தது தற்கரு வென்றடைகாத்
தாலையு ளைந்திழி யிக்கிடு மின்பம வித்திசை பாடனவே.
 
காலை ஒளிர்ந்து உளி, மொட்டு இதழ் விண்ட கடிக்கமலம் தவிசின்
சூலை உளைந்து ஒளிர் முத்து சொரிந்த வளைக்குலம் நின்று இரிய,
மாலை உறைந்து உளி பொற்சிறை வந்து, அது தன் கரு என்று
                                            அடைகாத்து,
ஆலை உளைந்து இழி இக்கு இடும் இன்பம் அவித்து இசை                                             பாடினவே

     காலையில் சூரியன் ஒளிர்ந்த போது, மொட்டின் இதழ்கள் விரிந்த
மணமுள்ள தாமரை மலர்களாகிய மெத்தையினுள் கருப்ப நோவு கொண்டு
ஒளி பொருந்திய முத்துக்களை ஈன்று சொரிந்த சங்கினங்கள் அங்கிருந்து
நீங்கின. மாலைப் பொழுது வந்த போது பொன்மயமான சிறகுகளை உடைய
அன்னங்கள் அங்கு வந்து சேர்ந்தன. ஒவ்வொன்றும் ஒவ்வொரு
மலரிலுமுள்ள முத்தைத் தன் முட்டையென்று கருதி அடைகாத்தது.
அதனால், அவ்வன்னங்களெல்லாம் ஆலையில் நைந்து இறங்கும் கரும்பு
தரும் சாற்றின் இன்பத்தை வென்ற முறையில் மகிழ்ந்து இசை பாடின.

     பொற்சிறை - பொன் மயனமான சிறகுகளை உடைய அன்னம்:
அன்மொழித்தொகை.