பக்கம் எண் :

முதற் காண்டம்525

 
"ஒளி அமை பிறை நுதல், புருவத்து ஒண்சிலை,
வெளி அமை உடு விழி, துகிரை வெல் இதழ்,
நளி அமை ஆம்பல் வாய், நளினம் நாண் முகம்
களி அமை நீர் உகக் காணல் ஆம்கொலோ?"

     "ஒளி பொருந்திய பிறை போன்ற நெற்றியையும், புருவமாகிய ஒளி
பொருந்திய வில்லையும், வானத்தில் அமைந்த விண் மீன் போன்ற
கண்ணையும், பவளத்தை வெல்லும் உதட்டையும், குளிர்ச்சி பொருந்திய
ஆம்பல் மலர் போன்ற வாயையும், தாமரை மலர் காண நாணும்
முகத்தையும் களிப்புடன் கூடிய கண்ணீர் சொரியக் காணவுங் கூடுமோ?

     புருவத்து ஒண் சிலை - சிலை போன்ற புருவத்தைச் சிலையாகக்
கூறிய உருவகம். ஏனையவெல்லாம் உவமைகள்.

 
               101
தண்படு மதுவொடு நறவு தாதவிழ்
நுண்படு மனிச்சையி னொய்ய சீறடி
தெண்படு மலரினை முத்தஞ் சேர்த்தியென்
கண்படு புனலினாற் கழுவ லாங்கொலோ.
 
"தண் படு மது வொடு நறவு தாது அவிழ்
நுண் படும் அனிச்சையின் நொய்ய சீறு அடி
தெண் படும் மலர் இணை முத்தம் சேர்த்தி, என்
கண் படு புனலினால் கழுவல் ஆம்கொலோ."

     "குளிர்ச்சி பொருந்திய தேனோடு மணம் கொண்ட இதழ்களை
விரிக்கும் நுண்ணிய அனிச்ச மலரினும் மெல்லிய சிறிய அடிகளாகிய
தெளிவு பொருந்திய இரண்டு தாமரை மலர்கள் மீதும் என் வாய்
முத்தத்தைப் பதித்து, என் கண்ணில் தோன்றும் நீரினால் கழுவவுங்
கூடுமோ?

     அனிச்சமலர் அடிகளின் மென்மைக்கு உவமையாகவும், தாமரை மலர்
அவற்றின் உருவத்திற்கு உருவகமாகவும் கொள்க.