பக்கம் எண் :

முதற் காண்டம்528

 
கோ முழுது இறைஞ்சிய கொற்றக் கொற்றவன்,
கா முழுது அளிப் படக் கலிகை விண்டு என,
பூ முழுது ஒழி நகை புரிதல் கண்டதேல்,
ஓ! முழுது உவந்து, உளத்து உருகி ஓங்குவேன்.

     "வானகம் முழுவதும் வணங்கிய வெற்றி வேந்தனாகிய இவ்வாண்டவன்,
சோலை முழுவதும் வண்டுகள் மொய்க்க அரும்புகள் மலர்ந்தது போல்,
பூக்களின் அழகு முழுவதையும் ஒழிக்கத் தக்க புன்னகை புரிதலைக் காணப்
பெறுவேனாயின், ஓ! நான் முழு மகிழ்ச்சி கொண்டு, மனத்துள் உருகி எழுச்சி
கொள்வேன்."

 
               107
பானலங் கழைநலம் பகரி யாழ்நலந்
தேனலங் கடந்தமென் குதலைத் தீஞ்சொலை
வானல முளம்படச் செவிகள் மாந்தினேல்
யானலங் குயிர்விட லினிய தாமரோ.
 
"பால் நலம் கழை நலம் பகர் யாழ் நலம்
தேன் நலம் கடந்த மென் குதலைத் தீம் சொலை,
வான் நலம் உளம் படச் செவிகள் மாந்தினேல்,
யான் அலங்கு உயிர் விடல் இனியது ஆம் அரோ.

     "பாலின் நலமும் கரும்பின் நலமும் பாடும் யாழின் நலமும் தேனின்
நலமும் கடந்த இக்குழந்தை நாதனின் மெல்லிய இனிய மழலைச் சொல்லை,
வானுலக இன்பமே உள்ளத்தில் தோன்றுமாறு செவிகளால் அருந்துவேனாயின்,
அதன் பின் நான் ஒளி கொண்ட என் உயிரை விடுதலும் இனிதே ஆகும்.

     மாந்தினேல் - 'மாந்தின்' என்பதே வினையெச்சமாய் அமையும்.
'மாந்தினேல்' என்பதுபோல், வினைமுற்றை வினையெச்சமாக்கப் பயன்படும்
'ஏல்' விகுதி இங்கு வேண்டாதே நின்றது: பகர் + யாழ் - பகரியாழ்; மெய்
முன் வந்த யகரம், இடையயே இகரம் பெற்றுப் புணர்ந்தது, 'அரோ'
அசைநிலை.