பக்கம் எண் :

முதற் காண்டம்537

     தாழ்ந்த நம்மிடம் அவன் வந்தடைதலே, அவன் தாழ்மையை
நாடுவதன் அறிகுறியாகும் என்பதன் கருத்து. 'மணி பெயர்' என்று
அடிதோறும் இயல்பாக நின்றனவெல்லாம் 'மணிப் பெயர்' என வல்லொற்று
மிகுந்து வரல் பழைய இலக்கண மரபு. பெற்ற + இக்கல் - 'பெற்றவிக்கல்'
எனற்பாலது, 'பெற்றிக்கல், என நின்றது தொகுத்தல் விகாரம்.
உணர்வான்கொல்லோ - உணர்வானோ: 'கொல்' இடையே அசைநிலை.

 
                     122
கதிர்செயு முலகின் வேந்தர் கழறொழ வுவகை பொங்கிப்
பொதிர்செயுந் திருவோ னீங்கு புற்றிரு நேடா னன்றோ
முதிர்செயுங் கனித்தேன் மாந்தி முன்னர்யா முற்ற நோயைப்
பிதிர்செயு மருந்தாங் கைக்கும் பிணியுணத் தலையாய்
                                        வந்தான்.
 
"கதிர் செயும் உலகின் வேந்தர் கழல் தொழ உவகை பொங்கி
பொதிர் செயும் திருவோன், ஈங்கு புன் திரு நேடான் அன்றோ?
முதிர் செயும் கனித் தேன் மாந்தி முன்னர் யாம் உற்ற நோயைப்
பிதிர் செயும் மருந்து ஆம் கைக்கும் பிணி உணத் தலையாய்
                                          வந்தான்."

     "ஒளி படைத்த வானுலக அரசர்போல் திகழும் வானவர் தன்
அடியைத் தொழுவதனால் மகிழ்ச்சி பொங்கிச் செறியும் செல்வம் படைத்த
இவ்வாண்டவன், இவ்வுலகிலுள்ள அற்ப செல்வத்தைத் தேடான் அல்லவா?
முதிர்ந்த விலக்கப்பட்ட கனியாகிய தேனை அருந்தியதனால் முன்
மனிதராகிய நாம் கொண்ட பாவ நோயைச் சிதறடிக்கும் மருந்தாய் அமைந்த
கசப்பான துன்பத்தை அனுபவிக்கத் தலைப்பட்டே அவன் இவ்வுலகிற்கு
வந்துள்ளான்."