பக்கம் எண் :

முதற் காண்டம்54

     அறத்தினால் அடையும் புகழே ஒளியுள்ள புகழ் என்றும், தாக்கும்
பகை கொண்டு நின்றவர்கள், ஒருவர் ஒருவரைக் கொல்லும் திறத்தால்

அடையும் புகழ் வஞ்சகமே என்றும் அந்நாட்டவர் தெளிந்தனர். அவ்வாறு
தெளிந்த மனம் சிதையுமாறு பாவத்தினால் அடையும் இன்பம் துன்பமே
என்றும் உணர்ந்தனர். அதற்கு மாறாக நடைமுறையில் வந்து வழங்கி
மயங்கச் செய்யும் யாவற்றையும் புறத்தே போக்கினர். அதனால் உண்டாகும்
இன்பத்தை முடிவின்றி அனுபவித்து அந்த அழகிய நாடு மகிழ்ச்சியால்
பொங்கினது.

     
நூலால் அறியும் நேரிய ஒழுக்கத்திற்கு முரணாக நடைமுறை
ஒழுக்கம் அமைந்து நன்மக்களையும் மயக்கும் இயல்பு இங்குக் குறிக்கப்
பெற்றது. 'துறும்' என்பது முதல் மூன்றடிகளிலும் தன் வினையாகவும்,
நான்காம் அடியில் பிறவினையாகவும் கொள்க. ''அறத்தான் வருவதே
இன்பம் மற்றெல்லாம், புறத்த புகழும் இல,'' என்ற குறள் (39) இங்கு
நினைக்கத்தக்கது.

  
                         72
எல்லைநி கழ்த்திய வெல்லென வெல்லையி லெந்தைநி
                                       கழ்த்திய நூல்
வில்லைநி கழ்த்திய மெய்மறை யின்விதி யுண்மைநி கழ்த்தியதூ
யொல்லைநி கழ்த்திய வொண்ணற மொன்றிய வுள்ளநி                                        கழ்த்தியசீர்
சொல்லைநி கழ்த்திய நுண்மை யறிந்தவர் சொல்லிநி                                        கழ்த்துவரோ.
 
எல்லை நிகழ்த்திய எல் என, எல்லை இல் எந்தை நிகழ்த்திய நூல்,
வில்லை நிகழ்த்திய மெய் மறையின் விதி, உண்மை நிகழ்த்திய தூய்
ஒல்லை நிகழ்த்திய ஒண் அறம் ஒன்றிய உள்ளம் நிகழ்த்திய சீர்,
சொல்லை நிகழ்த்திய நுண்மை அறிந்தவர் சொல்லி நிகழ்த்துவரோ?

     ஒளியைப் பரப்பிய கதிரவனைப் போல, எல்லை இல்லாத எம்
தந்தையாகிய ஆண்டவனே சொல்லித் தந்த நூலாய் அமைந்து ஒளியைப்
பரப்பிய மெய் மறையின் நெறிமுறைகளை உண்மையென்று காட்டும்
வகையில், விரைந்து கடைப்பிடித்த தூய ஒளியுள்ள அறத்தோடு ஒன்றிய
உள்ளம் அந்நாட்டில் விளைவித்த சிறப்புக்களை, சொல்லைக்
கையாளக்கூடிய நுட்பம் அறிந்தவரும் சொல்லிக்காட்ட வல்லவரோ?