பக்கம் எண் :

முதற் காண்டம்542

     வெதும்பிய கோடைக் காலத்தில் நிழல் தந்து நின்ற கொம்பில்
அமர்ந்து கொண்டு, தாம் அருந்திய அமுதத்தை உமிழ்ந்த தன்மையாய்ப்
பேசும் நல்ல நிறமுள்ள இரண்டு கிளிகள் என்னும் படியாக அவ்விருவர்
தாமும் இவ்வாறெல்லாம் பேசிக் கொண்டிருந்தனர். அவ்வறுமை மீது
கொண்ட ஆசை என்னும் பெருங்காற்று பொங்கிச் சுழற்றிய
நெஞ்சத்தோடு, அவர்தம் ஆவி இன்பக் கடலில் மூழ்கிக் கிடந்தது.

                    பேறுகாலம் நெருங்குதல்

 
                   130
தோடணி மகளிர் மன்றல் தொடங்கிய வுவகை போலக்
கேடணி யுலகம் பூத்த கேதமற் றுவப்பக் கன்னி
நீடணி கருப்ப முற்றி நீத்தெழும் பருதி போல்மெய்க்
கூடணி பரமன் றோன்றக் குணித்தநாள் குறுகிற் றம்மா.
 
தோடு அணி மகளிர் மன்றல் தொடங்கிய உவகை போல,
கேடு அணி உலகம் பூத்த கேதம் அற்று உவப்ப, கன்னி
நீடு அணி கருப்பம் முற்றி, நீத்து எழும் பருதி போல், மெய்க்
கூடு அணி பரமன், தோன்றக் குணித்த நாள் குறுகிற்று
                                       அம்மா.

     காதுகளில் தோடு அணிந்த மகளிர் தமக்குத் திருமண ஏற்பாடு
தொடங்கிய காலத்தில் கொள்ளும் மகிழ்ச்சி போல, பாவக் கேட்டைத்
தன்மீது அணிந்துகொண்ட இவ்வுலகத்திற்கு உண்டான துன்பம் நீங்கி
மகிழுமாறு, கன்னி மரியாள் நெடுநாள் தாங்கியிருந்த கருப்பம் முதிர்ந்து,
உடலாகிய கூட்டைத் தன் மீது அணிந்து கொண்ட ஆண்டவன், கடலை
விட்டு உதித்து எழும் ஞாயிறுபோல் பிறந்து தோன்றக் குறித்த நாள்
அடுத்து வந்தது.

     'அம்மா' அசைநிலை.

 
                     131
வீமுயங் கியபைந் தோகை விரித்தநன் மஞ்ஞை போன்றே
மீமுயங் கியமீன் செய்த வெயின்முடி பூண்ட கோதை
சேமுயங் கியமெய் போர்த்த சேயெழு முன்றன் கையாற்
பூமுயங் கியபா லாவிப் பூந்துகில் வனைந்திட் டாளே.