பக்கம் எண் :

முதற் காண்டம்544

     அகிற் புகை போன்ற நல்ல புகைகளால் மணமூட்டியும் துளித்த
தேனைக் கருவாகக் கொண்ட பசுமையான பூமாலையினின்று வடித்து
இறக்கின நல்ல மணம் கமழும் பன்னீரைத் தெளித்தும், ஒரு பேழையில்
அவ்வழகிய நல்ல ஆடையை வணக்கத்தோடு இட்டு வைத்து, தன்
மனத்தைப் பூட்டி வைத்தாற் போலத் தன் திரு மகனின் பெயரையே
நல்ல பூட்டாகக் கொண்ட பூட்டி, மகன் பிறக்கும் நாளை எதிர்பார்த்து
விருப்பத்தோடு இன்பமாகக் காத்திருந்தாள்.

 
                     133
தண்டமிழ்ச் சொல்லு நூலுஞ் சால்பொடு கடந்த வண்ணத்
துண்டமிழ் துவப்பி னுள்ளத் தோங்குமிவ் விருவர் தம்முட்
பண்டமி ழுரைத்த தேபோற் பயன்பகர்ந் திளவற் காண
மண்டமிழ் துகும வாவின் மகிழ்வினை யுரைப்ப ராரோ.
 
தண் தமிழ்ச் சொல்லும் நூலும் சால்பொடு கடந்த வண்ணத்து,
உண்ட அமிழ்து உவப்பின் உள்ளத்து ஓங்கும் இவ் இருவர்,
பண் தமிழ் உரைத்ததே போல் பயன் பகர்ந்து, இளவற் காண
மண்டு அமிழ்து உதும் அவாவின் மகிழ்வினை உரைப்பர்
                                           ஆரோ?

     குளிர்ச்சி பொருந்திய தமிழ்ச் சொல்லையும் எம் மொழியின்
எந்நூலையும் பெருமையால் வென்ற தன்மையாக, தாம் உண்ட அமிழ்தம்
போன்ற மகிழ்ச்சியால் உள்ளத்தில் எழுச்சி கொண்டிருக்கும் இவ்விருவரும்,
வீணை தமிழ் பேசியதுபோல் அவதாரப் பயனைப் பற்றித் தமக்குள் பேசிக்
கொண்டிருந்து, அச்சிறுவனைப் பிறந்து காணப் பெருகும் அமிழ்தத்தையும்
வெல்லும் ஆசையின் மகிழ்ச்சியை உரைக்க வல்லவர் யாரோ?

                 மகிழ் வினைப் படலம் முற்றும்

               ஆகப் படலம் 9க்குப் பாடல்கள் 852