பாவப்
பழியையெல்லாம் போக்கி, மனிதர் மீது நீங்காத பகை முற்றிய
கொடுங்கோல் செலுத்தி அழிவெல்லாம் தந்து நின்ற பேயை வென்று,
இழிவையெல்லாம் ஒழித்து, கடவுளையும் மனிதரையும் ஒன்றாய்க் கட்டி
இணைப்பதற்கென்று அவ்வாண்டவனே ஒரு குழந்தையாய்ப் பிறக்கும் நேரம்
வரவே, உலகின் இடமெல்லாம் போர் நீங்கி, எங்கும் ஒரு வெண்கொற்றக்
குடையே நிழல் தந்து நின்றது.
'அன்றே' அசைநிலை.
'உழி எலாம்' என்றாரேனும், பாலத்தீனத்தையும்
அதனைச் சூழ்ந்து கிடந்த உரோமானியர் ஆட்சிப் பகுதியையுமே
குறிப்பதாகக் கொள்க.
4 |
நிலமுறை
பகையைச் சீக்கி நிகரிலொத் தவியா னென்பான்
வலமுறை யொருவ னாண்ட வளமையாற் செருக்குற் றெங்கும்
பலமுறை பிரிந்த யாரும் பண்டுறை காணி யூர்போய்க்
குலமுறை யிறையு மெண்ணுங் கொணர்ந்திடப் பணியிட்டானே. |
|
நிலம் உறை பகையைச்
சீக்கி, நிகர் இல் ஒத்தவியான் என்பான்,
வல முறை ஒருவன் ஆண்ட வளமையால் செருக்கு உற்று, எங்கும்
பல முறை பிரிந்த யாரும் பண்டு உறை காணி ஊர் போய்,
குல முறை இறையும் எண்ணும் கொணர்ந்து இடப் பணி இட்டானே.
|
ஒப்பற்ற ஒத்தவியான்
என்பவன், உலகிலுள்ள தன் பகைவரையெல்லாம்
ஒடுக்கி, தான் ஒருவனே வலிமையோடு உலகை ஆண்ட பெருமையால்
அகந்தை கொண்டு, பல தலை முறைகளால் எங்கும் பிரிந்து சென்ற தன்
குடிகள் யாவரும் பழமையாகத் தாம் தாம் வாழ்ந்திருந்த பரம்பரை ஊருக்குப்
போய், தம் குல முறையும் குடும்பத்தார் எண்ணிக்கையும் வரியோடு
கொண்டு வந்து கொடுக்குமாறு கட்டளையிட்டான்.
காணி
- உரிமைச் சொத்து. அது இங்கு உரிமைச் சொத்தைக்
கருதாமல், பரம்பரையாய் வந்த பிறப்புரிமை இடத்தைச் சுட்டி நின்றது.
இறைவரி: தலைவரி. எண் - எண்ணிக்கை: குடிக்கணக்கு.
|