பக்கம் எண் :

முதற் காண்டம்552

     தேன் போன்ற அச்சொல்லைச் செழுமையான தவத் தோனாகிய சூசை
தன் செவியால் அருந்தியதும் மனத்தில் எழுச்சி கொண்டு, மரியாளை
நோக்கிப் பின்வருமாறு சொல்வான்: "விண்மீன் போன்று விளங்கும்
பொன்னாற் செய்த பல்லக்கும், மத மயக்கம் கொண்ட யானையும்,
பாய்ந்தோடும் விலங்காகிய குதிரையும், வானம் போல் உயர்ந்து நிற்கும்
பொன்னாற் செய்த உறுதியான தேரும் நம் போல் வறியவர்க்கு
இல்லாமையால், காடு போல் முள் மரங்கள் செறிந்து கிடக்கும் பாதையில் நீ
நடந்து செல்வதைக் காண்பது மனத்தால் பொறுத்துக் கொள்வதற்கு
அரியதாகும்!

     அடுத்த பாடலோடு பொருள் முடியும் இப்பாடலின் இடையே, தொடர்பு
குறித்து, 'மரியாளை நோக்கிப் பின் வருமாறு சொல்வான்' என்ற தொடர்
வருவித்து உரைக்கப்பட்டது. 'பரிமா' என்ற இடத்து 'மா' என்பது விலங்கினப்
பொதுப் பெயர்: அரிமா, கரிமா, நரிமா எனவெல்லாம் வருவன காண்க.

 
                    12
தொன்மாண்ட புடைநகரிற் றுன்னியபின் னாங்குறையும்
பொன்மாண்ட முடித்தாவிற் பொலிவமைந்த வெங்குலத்தோர்
வன்மாண்ட வருட்புரிந்து வந்ததுய ராறுமெனத்
தன்மாண்ட வுளத்திதுவே சார்பெனத்தா னுணர்ந்தானே,
 
"தொல் மாண்ட புடை நகரில் துன்னிய பின், ஆங்கு உறையும்
பொன் மாண்ட முடித் தாவின் பொலிவு அமைந்த எம் குலத்தோர்,
வல் மாண்ட அருள் புரிந்து, வந்த துயர் ஆறும்" என,
தன் மாண்ட உளத்து இதுவே சார்பு எனத் தான் உணர்ந்தானே.

     "பழமையான மாண்பு கொண்ட இடம் பரந்த அந்நகரை நாம்
அடைந்த பின், அந்நகரில் வாழும் பொன்னால் செய்த முடியை அணிந்த
தாவிது மன்னனால் பொலிவு கொண்ட நம் குலத்தோர், விரைந்து வந்து
மாண்புள்ள கருணையைப் புரிவதனால், வழி நடந்து வந்த வருத்தம்
தணியும்"என்று அவளுக்குக் சொன்னான்; இதுவே தனக்குச் சார்பாகும்
என்று தன் மாண்புள்ள மனத்தில் உணர்ந்தான்.