துன்பங்
கண்டு துவளாத தூய தவத்தோனாகிய சூசையும், அவனது
துணைவியாகிய அழகிய ஞான அணி பூண்ட மரியாளும், அழியாத
அன்புரிமை மேம்பாட்டால் இரண்டு அன்றில் பறவைகளை ஒத்தவராய்,
மலை யுச்சியிலிருந்து பாய்ந்த வெள்ளத்திற்கு நிகராக மகிழ்ச்சி மிகவாய்ப்
பொங்கி எழுந்த வண்ணமாய், தள்ளத் தகாத ஆண்டவனின் கட்டளை
முறைப்படி செல்வதென உணர்வு கொண்டனர்.
அன்றில்
- ஆணும் பெண்ணுமாக எப்பொழும் இணை பிரியாது
வாழும் ஒரு பறவை இனம். 'துவளாத' என்பது, 'துவட்டாத' என எதுகை
நோக்கித் திரிந்து நின்றது.
15 |
பூண்மின்னு
மணிப்பேழை போன்றருஞ்சூல் முற்றணிந்தாள்
கோண்மின்னு முடிதாழக் கொழுநனைத்தான் றொழவவனு
மாண்மின்னு மனம்வெருவி வணங்கப்பின் பிருவர்தொழுந்
தாண்மின்னு மகன்றந்த வாசியொடு தடங்கொண்டார். |
|
பூண் மின்னும்
மணிப் பேழை போன்று அருஞ் சூல் முற்று
அணிந்தாள்
கோள் மின்னும் முடி தாழக் கொழுநனைத் தான் தொழ, அவனும்
மாண் மின்னும் மனம் வெருவி வணங்க, பின்பு இருவர் தொழும்
தாள் மின்னும் மகன் தந்த ஆசியோடு தடம் கொண்டார். |
அணிகள் உள்ளே
கிடந்து மின்னும் மாணிக்கப் பெட்டகம் போன்று
முதிர்ந்த அரிய கருப்பம் தாங்கிய மரியாள் விண்மீன்கள் மின்னும்
தன்முடியைத் தாழ்த்திக் கணவனைத் தொழுதாள். அவனும் மாண்பு
மிளிரும் தன் மனம் நடுங்க அவளை வணங்கினான். பின்பு அவ்விருவரும்
சேர்ந்து தொழுத ஒளிரும் திருவடி கொண்ட திருமகன் தந்த ஆசியோடு
வழித் தடத்தே சென்றனர்.
மரியாள் தன்
மனையாளேயாயினும், கடவுளின் தாயாயிருந்து தன்
திருவயிற்றில் அக்கடவுளைத் தாங்கிய கருப்பத்தோடு வணங்கக் கண்டது
சூசையின் நடுக்கத்திற்குக் காரணமாயிற்று. 'முற்று சூல் அணிந்தாள்'
எனவும், 'மின்னும் தாள் மகன்' எனவும் சொற்களை மாற்றிக் கூட்டுக. |