பிறையை மிதித்த
மரியாளைச் சூழ்ந்த வண்ணமாய், வானோர் அணியணியாய்
வணங்கிக் கொண்டு, மழைத் துளியைப் பழித்த மலர் மழையை வழி நெடுகப்
பொழிகின்றனர்.
இவ்வானோர்
முன் கூறிய ஆயிரம் (8:48) வானவரின் வேறாயவர்
என அறிக.
18 |
வஞ்சத்தார்
மனம்போல விருண்டவிரா வாட்டுமொளி
விஞ்சத்தா ரணியறியா வெயில்வெள்ள மும்பருகத்
தஞ்சத்தார் தவஞ்செய்தோர் தகைபோல விவர்க்கிருள்சூ
ழெஞ்சத்தா மிரவுபக லென்றறியா தேகுகின்றார். |
|
வஞ்சத்தார்
மனம் போல இருண்ட இரா வாட்டும் ஒளி
விஞ்ச, தாரணி அறியா வெயில் வெள்ளம் உம்பர் உக,
தஞ்சத்து ஆர் தவம் செய்தோர் தகை போல இவர்க்கு
இருள் சூழ்
எஞ்ச, தாம் இரவு பகல் என்று அறியாது ஏகுகின்றார். |
வஞ்சகம் கொண்டவர்
மனம் போல இருண்ட இரவை அறவே
ஒழிக்கத் தக்க ஒளி பெருகுமாறு, உலகம் கண்டறியாத ஒளி வெள்ளத்தை
வானவர் பொழிந்து நிற்றலால், எளிமை மேற்கொண்டு நிறைந்த தவத்தைச்
செய்தோர் தம் பெருமை போல இவ்விருவர்க்குச் சுற்றிலும் இருள்
விலகவே, தாம் இரவு பகல் என்ற வேறுபாடு அறியாமல் செல்லுகின்றனர்.
தஞ்சம்-எளிமை:
"தஞ்சக் கிளவி எண்மைப் பொருட்டே" என்பது
தொல்காப்பியம் (சொல். இடையியல், 18). "முரசுகெழு தாயத்து அரசோ
தஞ்சம்" என்பது புற நானூறு (73). 'உக' என்ற தன்வினை 'உகுக்க' என்ற
பிறவினைப் பொருளில் நின்றது.
19 |
புண்காத்த
மருந்தன்ன பொலியருட்சேர் மாதவனும்
விண்காத்த வேந்தனைச்சூல் வேய்ந்தொவ்வாக்
கன்னிகையும்
மண்காத்த வருள்பரப்பி வழிவருங்கால் வளைத்திவரைக்
கண்காத்த நிமையென்னக் காத்தாரக் ககனத்தார். |
|