பக்கம் எண் :

முதற் காண்டம்560

     மீன்களைக் கொண்டுள்ள தடாகம் தேன் நிறைந்த மலர்களை
விரிப்பதனால், மாலை வேளையில் நிறைந்த விண்மீன்களைக் காட்டி
நின்ற வானம் போலவும், சோலையில் நிறைந்த மரங்களிலுள்ள பூக்கள்
நிறைந்த கிளைகளின் தோற்றம், மாலை அணிந்து நிற்கும் மணமகள்
போலவும் விளங்கும்.

     முதலடியில் 'ஆம்' என இடையே நின்ற சொல்லை இறுதியாகக்
கொண்டு பொருள் முடிவு காண்க.
 
             25
வீறி மின்னிய விண்டிரள் பெய்தநீ
ரூறி நீத்தமு டுக்கென வோங்கிவர்
தேறி யெங்கணுஞ் செய்தயை நேரநல்
லாறி தொத்தென வோடிய வாலையே.
 
வீறி மின்னிய விண் திரள் பெய்த நீர்
ஊறி நீத்தம் முடுக்கு என, ஓங்கு இவர்
தேறி எங்கணும் செய் தயை நேர, நல்
ஆறு இது ஒத்து என, ஓடிய ஆலையே.

     வீறிட்டு மின்னிய மேகத்திரள் பொழிந்த நீர் பெருகி வெள்ளமாய்
விரைந்து பாய்வது போல, உயர்ந்தோராகிய இவ்விருவரும் தெளிந்த
மனத்தோடு தாம் சென்ற இடமெங்கும் செய்த தயவைப் போலவும், இது
நல்ல ஆற்றை ஒத்திருந்ததென்று கண்டோர் சொல்லவும், கரும்பாலைகளில்
கருப்பஞ் சாறுகள் நிறைந்து பாய்ந்தன.
 
               26
கொம்பி னார்குயில் கூவவு மஞ்ஞைகள்
பம்பி யாடவும் பைஞ்சிறைத் தேனொடு
தும்பி பாடவும் தூயன நாணவு
நம்பி மாதொடு நன்னெறி போயினான்.
 
கொம்பின் ஆர் குயில் கூவவும், மஞ்ஞைகள்
பம்பி ஆடவும், பைஞ் சிறைத் தேனொடு
தும்பி பாடவும், தூய் அனம் நாணவும்,
நம்பி மாதொடு நல் நெறி போயினான்.