பக்கம் எண் :

முதற் காண்டம்562

வெம் சினக் கரி மேய்ந்து உகும் வெள்ளிலோ,
நஞ்சின் முற்றிய காஞ்சிரமோ, நகை
விஞ்சி வெற்று எழில் பாவையின் வேடமோ,
நெஞ்சின் நல் தகை நீத்த எழில் நாரியே?

     தன் நெஞ்சில் நல்ல தன்மை எல்லாம் ஒழித்த அவ்வழகியப் பெண்,
கடுஞ்சினமுள்ள யானை உண்டு வெளிப்படுத்தும் விளாங்கனி என்போமோ?
நஞ்சில் முதிர்ந்த எட்டிக் காய் என்போமோ? அணிகள் மிகுதியாக
அணிந்து வீணான அழகைக் காட்டிய பொம்மையின் வேடம் என்போமோ?

     'யானை' என்பது விளாங்கனியின் உள்ளீடாகிய சதைப்பற்றை உறிஞ்சி
அழிக்கும் ஒரு நோய். யானை என்ற பெயர் மயக்கத்தால், அதனை யானை
என்னும் விலங்காகக் கொண்டு, அது முழுமையாக உண்ட விளாங்கனி
உள்ளீடு உறிஞ்சப் பெற்று முழுமையாகவே வெளிப்படும் என்று கூறுவது
மரபு. நீத்த + எழில் 'நீத்தவெழில்' என வரவேண்டியது, 'நீத்தெழில்' எனத்
தொகுத்தல் விகாரமாயிற்று.
 
              29
ஆல மேந்திய வானனத் தோடிநற்
கோல மேந்திய கோளென வேய்ந்துகொல்
கால னேந்திய வாள்கவர்ந் தீர்ந்துயிர்
நீல மேந்திநி றைந்துணுங் கண்ணினாள்.
 
ஆலம் ஏந்திய ஆனைத்து ஓடி, நல்
கோலம் ஏந்திய கோள் என வேய்ந்து, கொல்
காலன் ஏந்திய வாள் கவர்ந்து ஈர்ந்து உயிர்,
நீலம் ஏந்தி, நிறைந்து உணும் கண்ணினாள்.

     நீல நிறம் தாங்கி, நஞ்சைத் தாங்கிய முகத்தில் நிலை கொள்ளாது
அங்குமிங்கும் ஓடி, நல்ல அழகு பூண்ட விண்மீன் போல ஒளியுடன்
அமைந்து, கொல்லும் யமன் தாங்கிய வாளைத் தானே பிடுங்கிக்கொண்ட
தன்மையாய் ஆடவர் உயிர்களைக் கவர்ந்து அரிந்து, அவற்றை
நிறைவாக உண்ணும் கண்களை உடையவள் அவள்.