பக்கம் எண் :

முதற் காண்டம்563

                30
புலம்பு மோதையி னொந்தெனப் பொன்னிடச்
சிலம்பு மேல்வலச் சீறடி யூன்றிவில்
லலம்பு னைந்தபொற் றூணயற் பொன்மலைத்
தலம்பு னைந்தமின் சாயலொத் தாளரோ.
 
புலம்பும் ஓதையின் நொந்து எனப் பொன் இடச்
சிலம்பு மேல் வலச் சீறு அடி ஊன்றி, வில்
அலம் புனைந்த பொன் தூண் அயல், பொன் மலைத்
தலம் புனைந்த மின் சாயல் ஒத்தாள் அரோ.

     வருந்திய தன்மையாய் ஒலிக்கும் கலிரென்ற ஓசையுள்ள இடக்காலில்
அணிந்துள்ள சிலம்பின்மேல் தனது சிறிய வலக் காலை ஊன்ற வைத்து,
ஒளியை மாலையாக அணிந்த பொன்னாலாகிய ஒரு தூணின் அருகில்,
பொன்மலையைத் தனக்கு இடமாகக்கொண்டு அழகிய மின்னற்கொடி
சாய்ந்து நிற்பது போன்று அவள் அதனோடு சாய்ந்து நின்றாள்.

     சீறடி - சிறுமை + அடி. 'அரோ' அசைநிலை.
 
               31
துகிற்க லாபமு டோன்றவி ளிம்பெடுத்
துகிர்க்கொ டாயலர் கிள்ளியு திர்த்தெழு
மகிற்க வர்புகை தூதுவிட் டங்குழல்
முகிற்க வர்மினின் மின்முகங் கோட்டுவாள்.
 
துகில் கலாபம் உள் தோன்ற விளிம்பு எடுத்து,
உகிர்க் கொடு ஆய் அலர் கிள்ளி உதிர்த்து, எழும்
அகில் கவர் புகை தூது விட்டு, அம்குழல்
முகில் கவர் மினின் மின் முகம் கோட்டுவாள்.

     தன் உள் அழகு வெளியே தோன்றுமாறு தன் ஆடையின்
முன்தானையை விளிம்பில் பிடித்து விலக்கி எடுத்துக்காட்டியும்,
அணிந்திருந்த மாலையிலுள்ள அழகிய மலரை நகத்தால் கிள்ளி எறிந்தும்,
தன்னைச் சுற்றிலும் எழுந்து பரவும் கவர்ச்சியான அகிற்புகையைக்
காமுகருக்குத் தூதாக ஏவியும், மேகத்தைக் கவர்ந்து இழுத்து வந்த மின்னற்
கொடிபோல் அழகிய கூந்தலோடு ஒளிரும் முகத்தை அங்குமிங்கும்
வளைத்துத் திருப்புவாள்.