32 |
பாற்க
லந்தன நஞ்சு பருகினாற்
போற்க லந்தன வின்பொடு புன்கணை
மாற்க லந்தம னத்துண மைந்தர்சூழ்
வேற்க லந்தகண் வெஃகிநெ ருங்கினார். |
|
பால் கலந்தன
நஞ்சு பருகினாற்
போல், கலந்தன இன்பொடு புன்கணை
மால் கலந்த மனத்து உண, மைந்தர் சூழ்
வேல் கலந்த கண் வெஃகி நெருங்கினார். |
பாலோடு கலந்த
நஞ்சைப் பருகினாற்போல, காம இன்பத்தோடு
கலந்த பாவமாகிய துன்பத்தையும் மயக்கம் கலந்த தம் மனத்தால்
உண்ணும் பொருட்டு, வேலைப் போன்ற அவள் கண் அழகை விரும்பி,
ஆடவர் அவளைச் சுற்றிலும் நெருங்கி நின்றனர்.
கலந்தன - கலந்த;
இடையே 'அன்' சாரியை பெற்ற பெயரெச்சம்.
33 |
காமத்
தீயெழ வோர்நகை காட்டினள்
வீமத் தீயெழ வெஞ்சினங் காட்டுவாள்
தூமத் தீயெழத் தோன்றிருள் போன்றுகண்
வாமத் தீயெழ வுண்ணிசி மல்குமால். |
|
காமத் தீ எழ
ஒர் நகை காட்டினள்,
வீமத் தீ எழ வெஞ் சினம் காட்டுவாள்;
தூமத் தீ எழத் தோன்று இருள் போன்று, கண்
வாமத் தீ எழ, உள் நிசி மல்கும் ஆல். |
கண்டவர் மனத்தில்
காம நெருப்பு எழுமாறு ஒரு புன் முறுவலை
முதலில் காட்டி நின்ற அவளே, பின் அச்சம் என்னும் நெருப்பு எழுமாறு
கொடுஞ் சினத்தைக் காட்டி நிற்பாள்; புகையைத் தரும் நெருப்பின்மேல்
எழுந்து மூடித் தோன்றும் இருள் போன்று, அவள் கண் அழகால் காமத்
தீ எழ, அவர் மனத்தில் இருளே பெருகும்.
'ஆல்'
அசைநிலை. |