34 |
மஞ்சு தோய்சிற
காடிய மஞ்ஞைபோல்
நஞ்சு தோய்மன நங்கைந றாவகில்
மஞ்சு தோய்துகி லாடிவ திந்தகால்
நெஞ்சு தோய்தக வோர்நெறி யெய்தினார். |
|
மஞ்சு தோய்
சிறகு ஆடிய மஞ்ஞை போல்,
நஞ்சு தோய் மன நங்கை, நறா அகில்
மஞ்சு தோய் துகில் ஆடி வதிந்த கால்
நெஞ்சு தோய் தகவோர் நெறி எய்தினார். |
காம நஞ்சு தோய்ந்த
மனம் படைத்த காந்தரி என்னும்
அம்மங்கை, மழை மேகம் மலைமேல் படியவும் தோகையை விரித்து
ஆடிய மயில்போல், மணமுள்ள அகிற் புகை என்னும் மேகம் படிந்த
தன் ஆடையைச் சுழற்றி ஆடி நின்ற வேளையில் கற்பென்னும்
புண்ணியம் நெஞ்சில் தோய்ந்தவராகிய சூசையும் மரியாளும் அவ்வழியே
வந்தடைந்தனர்.
35 |
கோல மூடிய
வங்கக்கு டத்திணை
சீல மூடிய தீமனங் கண்டுகார்
நீல மூடிய பானொடு நேர்மிடி
சால மூடுத லைவியி ரங்கினாள். |
|
கோலம் மூடிய
அங்கக் குடத்து இணை
சீலம் மூடிய தீ மனம் கண்டு, கார்
நீலம் மூடிய பானொடு நேர் மிடி
சால மூடு தலைவி இரங்கினாள். |
புறக்கோலத்தினால்
மூடிய அலங்காரக் குடத்திற்கு ஒப்பாக,
சேலையால் தன்னை மூடி மறைத்த அம்மங்கையின் தீய மனத்தைக் கண்டு,
நீலக் கருமேகம் மூடி மறைத்த கதிரவனுக்கு ஒப்பாக, வறுமையால் மிகவும்
மூடப்பட்ட புண்ணியத் தலைவியாகிய மரியாள் இரக்கம் கொண்டாள்.
சீலம்-'சீலை'
என்பது எதுகைப் பொருட்டுத் திரிந்துநின்றது. அதுவே
அணி முதலிய பிற அலங்காரங்களையும் உடன் சுட்டுவதாய் அமைந்தது.
|