36 |
வீய்க
லந்தவ னப்பொடு வீங்குளம்
பேய்க லந்து குடியெனப் பேர்கிலா
தீய்க லந்தசி தைவுடைப் பேதையை
நோய்க லந்தவு யிர்ப்பொடு நோக்கினாள். |
|
வீய் கலந்த
வனப்பொடு வீங்கு உளம்
பேய் கலந்து, குடி எனப் பேர்கு இலா
தீய் கலந்து சிதைவு உடைப் பேதையை
நோய் கலந்த உயிர்ப்பொடு நோக்கினாள். |
மலர் போன்ற
உடல் அழகோடு ஓங்கிய தன் உள்ளத்தில் பேய்
சேர்ந்து, குடிகொண்ட தன்மையாய் நீங்குதல் இல்லாது, தீமையே சேர்ந்து
அழிவைக் கொண்டுள்ள அப் பேதைப் பெண்ணை, துன்பங் கலந்த
பெருமூச்சோடு மரியாள் கூர்ந்து நோக்கினாள்.
வீ, தீ என்பன
எதுகை நோக்கி வீய், தீய் எனத் திரிந்து நின்றன.
37 |
கண்ட தீயவை
யல்லது கண்ணுறா
கொண்ட தீயவை யெண்ணுவர் கொல்லெனா
வுண்ட தீயவு ளத்திலு றைந்தபே
யண்ட வாகைவ ளற்கவள் சுட்டினாள். |
|
"கண்ட தீயவை
அல்லது, கண் உறா
கொண்ட தீயவை எண்ணுவர் கொல்?" எனா,
உண்ட தீய உளத்தில் உறைந்த பேய்
அண்ட வாகை வளற்கு அவள் சுட்டினாள். |
"வெளிப்படையாகக்
கண்ட தீமைகளை எவரும் எண்ணுவரே
அல்லாமல், கண்ணுக்குத் தோன்றாமல் உள்ளத்தில் கொண்டுள்ள
தீமைகளை எண்ணுவரோ?" என்று கூறியவண்ணம், பாவத்தை உட்கொண்ட
அப்பெண்ணின் தீய உள்ளத்தில் குடிகொண்டிருந்த பேயை, வானுலகினின்று
கிடைத்த மலர்க் கொடியைத் தாங்கியுள்ள சூசைக்கு மரியாள்
சுட்டிக்காட்டினாள்.
|