பக்கம் எண் :

முதற் காண்டம்567

     'எண்ணுவர் கொல்' என்றவிடத்து, 'கொல்' எதிர்மறை கருதிய வினாப்
பொருளில் நின்றது.
 
                38
கொடிய கோற்கொடு வாண்டகு ணுக்கினம்
மடியச் சூற்கொடு வந்தவ னாமவற்
கடிய வேற்கொடு வக்கடி யோட்டெனா
நெடிய கோற்கொடு நின்றவன் வேண்டினான்.
 
"கொடிய கோல் கோடு ஆண்ட குணுங்கு இனம்
மடியச் சூல் கொடு வந்தவன் நாம வல்
கடிய வேல் கொடு அக் கடி ஓட்டு" எனா
நெடிய கோல் கொடு நின்றவன் வேண்டினான்.

     நீண்ட மலர்க் கோலைத் தாங்கி நின்ற சூசை, மரியாளை நோக்கி,
"கொடுங்கோன்மை கொண்டு இவ்வுலகத்தை ஆண்டு நின்ற பேய்க்கூட்டம்
கெட்டு ஒழியுமாறு கருவாகி உன்னிடம் வந்துள்ள திருமகனின் பெயராகிய
வலிமையும் கூர்மையும் கொண்ட வேலைத் துணையாகக் கொண்டு அந்தப்
பேயை நீயே ஓட்டிவிடு" என்று வேண்டினான்.

     குணுங்கு + இனம் - குணுக்கினம்: 'செப்புக்குடம்' போல.
 
               39
மொய்கொள் நீரொடு மூவுல கிற்கெலா
மெய்கொள் நாயகி மேவியுள் ளேவலால்
மைகொள் சோகுப ழம்பதி மாற்றிவாய்ப்
பொய்கொள் வேகந ரகுறப் போயதே.
 
மொய் கொள் நீரோடு மூ உலகிற்கு எலாம்
மெய் கொள் நாயகி மேவி, உள் ஏவலால்,
மை கொள் சோகு பழம் பதி மாற்றி, வாய்ப்
பொய் கொள் வேகம் நரகு உறப் போயதே.

     அலைகள் மோதிப் போர் செய்யும் கடலுக்கும் மூன்றாகக் கூறப்படும்
உலகங்களுக்கெல்லாம் உண்மையான அரசியாகிய மரியாள் மனம் பொருந்தி
தன் உள்ளத்தில் எண்ணி இட்ட கட்டளையால், குற்றம் கொண்ட
அப்பேயைத் தன் பழைய உறைவிடத்தினின்று மாறச் செய்யவே, அது
வாயினின்று பிறக்கும் பொய் பரவும் வேகம்போல் நரகம் சேரப் போயிற்று.