பக்கம் எண் :

முதற் காண்டம்570

"நீர் ஆர் பவளத் துறையின் நிரை நித்திலம் உய்த்து
                                    என்னா,
ஏர் ஆர் துவர் வாய் முறுவல் இலங்க நின்றாள், ஏதோ
சூர் ஆர் முகத்தோடு, உரையா துறந்தாள்!" என்று, ஆங்கு
                                    உறைந்தார்,
வார் ஆர் கழல் ஆர்த்து இடிப்ப, வருந்தி வெருவிப்
                                    போனார்.

     அங்குத் தங்கி நின்ற ஆடவர், "கடலிலுள்ள பவளத்தால் ஆகிய
துறையில் வரிசையாக முத்தைப் பதித்து வைத்தாற் போல், அழகு நிறைந்த
சிவந்த வாயில் பற்கள் துலங்கச் சிரித்து நின்ற அக்காந்தரி, ஏதோ அச்சம்
நிறைந்த முகத்தோடு, ஒன்றும் பேசாமல் நம்மைத் துறந்து போய்
விட்டாளே!" என்று கூறி, வாரால் கட்டின தம் கழல்கள் ஒலித்து இடிபட,
வருந்தியும் அஞ்சியும் அகன்றனர்.
 
                      44
விண்டோய் மாடத் தொதுங்கி வினையற் றுளந்தூண் டுணர்வாற்
கண்டோய் புனலா டிடைன் கசடே கருதுந் தன்மைத்
துண்டோ யிலமெய்ஞ் ஞானத் துறுதித் துணையோ ரமரன்
மண்டோய் துகடீர்த் தவன்றாய் விடவே மனமோங் கினளால்.
 
விண் தோய் மாடத்து ஒதுங்கி, வினை அற்று; உளம் தூண்டு
                                         உணர்வால்
கண் தோய் புனல் ஆடினள், தன் கசடே கருதும் தன்மைத்து
உண்டு ஓய் இல, மெய்ஞ் ஞானத்து உறுதித் துணை ஓர் அமரன்,
மண் தோய் துகள் தீர்த்தவன் தாய், விடவே, மனம் ஓங்கினள் ஆல்.

     வானத்தை அளாவிய தன் மாளிகையில் ஒதுங்கிப் போய், செயலற்று,
தன் உள்ளம் தூண்டும் வருத்த உணர்வால் கண்ணினின்று சொரிந்த நீரில்
ஆடிய அவள், தன் பாவத்தையே கருதும் தன்மையாக உட்கொண்டு
ஒயாதவள் ஆயினாள்; இம் மண்ணுலகில் தோய்ந்து கிடக்கும் பாவங்களைப்
போக்கிய ஆண்டவனின் தாயாகிய மரியாள், மெய்ஞ்ஞானத்தின் உறுதியான
துணையாக ஒரு வானவனை அனுப்பி வைக்கவே, மன எழுச்சி கொண்டாள்.

     'ஆல்' அசைநிலை.