பக்கம் எண் :

முதற் காண்டம்575

'மீனே கொடியாய், விதுவே குடையாய், வேலை முரசாய்,
கானே உமிழ் பூ கணையாய், கழையே தனுவாய் உருவம்
நானே எழுதி, நாமம் வேள் என்றேன். என் உயிரைத்
தானே உண்டான்; இனி, கொல் சமன் ஆக்குவன் நான்!"
                                      என்றாள்.

     "மீனைக் கொடியாகவும், மதியைக் குடையாகவும், கடலை முரசாகவும்,
மணம் பொழியும் மலரை அம்பாகவும், கரும்பை வில்லாகவும் நானே படம்
எழுதி, இவ்வுருவத் தொகுப்பின் பெயர் மன்மதன் என்று போற்றினேன்.
அவன் தானே என் உயிரைப் பாவத்தால் உண்டு விட்டான்; எனவே, இனி
அவ் வுருவத்தைக் கொல்லும் யமன் உருவமாக மாற்றுவேன்!" என்றாள்.

     மன்மதனுக்கு உருவம் இல்லையாதலின், அவன் கொடி முதலியவற்றை
வரைந்து, அவ்வுருவத் தொகுப்பை மன்மதனென்று கொண்டாள் என அறிக.
'முன் காமம் வளர மன்மதனை இனிதாய்ப் பார்த்தவள் பின்பு ஞானம்
வளரச் சாவைத் தியானிப்ப ளென்பது கருத்து' என்பது பழைய உரைக்
குறிப்பு. சமன்-'யமன்' என்ற சொல்லின் முதற் போலி.
 
                      52
நின்னை மறந்தாய் நெஞ்சே நெடுங்கோ னீதி வல்லோன்
றன்னை மறந்தாய் நெஞ்சே தழலத் தழல்கீ ழுலகுய்த்
தென்னை மறந்தாய் நெஞ்சே யினிமுன் விழைந்த தெல்லாம்
பின்னை மறப்பாய் நெஞ்சே யென்னாப் பெரிதார்த் தழுதாள்.
 
"நின்னை மறந்தாய், நெஞ்சே; நெடுங் கோல் நீதி வல்லோன்
தன்னை மறந்தாய், நெஞ்சே; தழலத் தழல் கீழ் உலகு உய்த்து,
என்னை மறந்தாய், நெஞ்சே; இனி, முன் விழைந்தது எல்லாம்
பின்னை மறப்பாய், நெஞ்சே!" என்னா, பெரிது ஆர்த்து அழுதாள்.