பக்கம் எண் :

முதற் காண்டம்579

     எனது பாடலால் ஒப்புக் கூற இயலாத இன்பத்தோடு இவர்கள்
இவற்றை ஆங்காங்கு ஏற்றவாறு நடத்தி, மின்னலோடு ஒளியைப் பரப்பித்
திரண்ட பதினாயிரம் வானவர் புடை சூழ்ந்து அன்போடு அணுகி வர,
ஐந்து நாட்களும் பயணத்தில் தங்கிக் கழிந்த பின், பொன் மயமாய்
உயர்ந்து நின்ற பெத்திலேம் என்னும் பொலிவுள்ள பெரு நகரை
அடைந்தனர்.

     - - காய், - - காய், - மா, தேமா, - - காய்.
 
                       58
ஓடையாய்ப் பெரிதொலித்துப் பெயர்ந்த வெள்ள மொழுகியபின்
கோடையாய் வற்றுமென வழியிற் கொண்ட கூர்நயமே
மாடையா யிலங்குநகர் வந்து மாற்றி மருவியதோர்
பீடையா யுணங்கன்னார் வருந்தும் பெற்றி பெரிதெனவே.
 
ஓடையாய்ப் பெரிது ஒலித்துப் பெயர்ந்த வெள்ளம் ஒழுகிய பின்
கோடை ஆய் வற்றும் என, வழியில் கொண்ட கூர் நயமே
மாடையாய் இலங்கு நகர் வந்து மாற்றி, மருவியது ஓர்
பீடை ஆய், உணங்கு அன்னார் வருந்தும் பெற்றி பெரிது எனவே,

     மலையினின்று பெயர்ந்த மழை வெள்ளம் பேரொலி செய்து
நீரோடையாய் ஓடிய பின் கோடை வந்ததும் வற்றிப் போவது போல,
வழியில் தாம் கொண்ட மிக்க இன்பம் பொன் மயமாய் விளங்கும் பத்திலேம்
நகர் வந்துசேர்ந்ததும் மாறப் பெற்று, தம்மை அடைந்த ஒப்பற்ற துன்பமே
ஆக, அதனால் வாடும் அவ்விருவர் வருந்தும் தன்மை பெரிதென்று
காட்டும்படியாக,

     இது குளகப்பாட்டாய், அடுத்த பாடலிலுள்ள 'செப்பலுற்றாம்' என்ற
தொடரோடு பொருள் நிறைவு பெறும்.
 
                        59
எரிமாலை தாங்குடலாற் பகல்செய் விண்ணோ ரிருபுடையிற்
புரிமாலை காண்டலிலா பொலிவான் மாட்சிப் புலமையினோ
ருரிமாலை காண்டலிலா வெளிமை போர்த்த வுருத்தோன்றத்
திரிமாலை கண்டவர்தாம் செய்த நிந்தை செப்பலுற்றாம்.