பக்கம் எண் :

முதற் காண்டம்582

     அடைப்பதற்கே அரிய கடல் போன்ற ஆசை உள்ளத்தில் பொங்க,
தமக்குச் செல்வம் கிடைப்பதற்காகவே உறவென்றும் கிளையென்றும்
தேடுவது இவ்வுலக இயல்பாகும். நிறைந்த வறுமையில் கொடுத்து
உதவுவதற்கென்று அரிய பொருளைக் கொண்டுள்ளவர்க்கே சுற்றம் உண்டு;
அல்லாமல் பிறர்க்கு அத்தகைய பயன் பயவாமல், நீக்குவதற்கரிய
வறுமையைத் தாமே கொண்டுள்ளவர்க்குச் சுற்றம் எனப்படும் ஒன்று
உண்டோ?
 
                      63
நஞ்செஞ்சாக் காஞ்சிரங்கா யழகென் றெண்ணி நச்சுவர்போல்
விஞ்செஞ்சா வினைபயக்கும் பொருளே வெஃகி விழிகடந்த
மஞ்செஞ்சா வருட்செல்வ மெண்ணா மூடர் வறியரெனா
நெஞ்செஞ்சாத் திருவோரை யெவரோ வென்னா நீக்கினரால்.
 
நஞ்சு எஞ்சாக் காஞ்சிரங் காய் அழகு என்று எண்ணி நச்சுவர்
                                           போல்,
விஞ்சு எஞ்சா வினை பயக்கும் பொருளே வெஃகி, விழி கடந்த
மஞ்சு எஞ்சா அருட் செல்வம் எண்ணா மூடர், வறியர் எனா
நெஞ்சு எஞ்சாத் திருவோரை, எவரோ என்னா நீக்கினர் ஆல்.

     நஞ்சு குறைதல் இல்லாத எட்டிப் பழம் அழகிய தோற்றம்
உள்ளதென்று எண்ணி விரும்புபவர் போல், குறைபடாது மேலோங்கும்
தீவினைகளே தரும் பொருட் செல்வத்தையே பெரிதென்று விரும்பி ஏற்றுக்
கொண்டு, கண்ணுக்கு எட்டாததும் தன் அழகு என்றும் குறைதல்
இல்லாததுமான அருட் செல்வத்தை மதியாத அவ்வூர் மூடர், தம் நெஞ்சில்
குறைபடாத இவ்வருட் செல்வத்தைக் கொண்டிருந்த இவ்விருவரையும்
வறியவரென்று கண்டு எவரோ என்பது போல் தள்ளி விட்டனர்.

                      64
பொன்னன்ன பொலிந்தநகர் புடைக டோறும் புகுந்தின்னார்
மின்னன்ன விரைந்திரிய வுருமென் றன்னார் விடைந்துடற்றப்
பின்னன்ன முகிலுறைபெய் யன்ன சூசை பெரிதழுது
முன்னன்ன நகருதவி யுணர்ந்த பாலால் முழுதுளைந்தான்.