பக்கம் எண் :

முதற் காண்டம்583

பொன் அன்ன பொலிந்த நகர் புடைகள் தோறும் புகுந்து
                                 இன்னார்
மின் அன்ன விரைந்து இரிய, உரும் என்று அன்னார்
                                 விடைந்து உடற்ற,
பின், அன்ன முகில் உறை பெய் அன்னசூசை பெரிது
                                 அழுது,
முன் அன்ன நகர் உதவி உணர்ந்த பாலால் முழுது
                                 உளைந்தான்.

     பொன் போலப் பொலிவுடன் விளங்கிய அந்நகரின் இடங்கள் தோறும்
புகுந்து இவர்கள் மின்னல் போல் ஒடி அலைந்தனர். ஆங்காங்கு உள்ளோர்
இடி போல் சினந்து சீறினர். பின், இடி கொண்ட அம்மேகம் மழை பெய்வது
போலச் சூசை பெரிதும் அழுதான்; முன் அதே நகர் தனக்குச் செய்த
உதவியை நினைந்த தன்மையால் நிறைவாக வருந்தினான்.
 
                    65
நான்செய்த குறைதானோ நகரே செய்த நவைதானோ
தான்செய்த விதிதானோ தரணி காக்கத் தற்பரனீங்
கூன்செய்த வுடலொடெழ விடமொன் றில்லை யுலகிலெனாத்
தேன்செய்த பூவுயர்த்தோ னரற்றி விம்மித் திரிவானாம்.
 
"நான் செய்த குறை தானோ? நகரே செய்த நவை தானோ?
தான் செய்த விதி தானோ? தரணி காக்கத் தற்பரன் ஈங்கு
ஊன் செய்த உடலொடு எழ இடம் ஒன்று இல்லை உலகில்!"
                                              எனா,
தேன் செய்த பூ உயர்த்தோன் அரற்றி விம்மித் திரிவான் ஆம்.

     தேன் கொண்ட மலர்க் கொடியை ஏந்திய சூசை, "நான் செய்த குறை
தானோ? இந்நகரமே செய்த பாவம் தானோ? ஆண்டவன் தானே செய்த
அமைப்புத் தானோ? தானாய் நிலை பெறும் ஆண்டவன் இவ்வுலகத்தை
மீட்டுக் காக்கும் பொருட்டு ஊனாலாகிய உடலோடு வந்து பிறக்க
இவ்வுலகில் இடம் ஒன்றும் கிடைக்கவில்லையே!" என்று புலம்பி விம்மித்
திரிவதாயினான்.