|
"நன்மை செய்ய
விருப்பம் கொண்டவர் அதற்கென்று ஒரு நேரத்தைத்
தேட மாட்டார். அவ்விருப்பம் அற்றவர் பிடிவாதம் கொண்டவராய்
அற்பமேனும் நன்மை செய்யார். அறிவுடையோர், ஊதியம் வருதலை
விரும்பி அதற்கேற்றதைப் பொருந்தச் செய்யும் வணிகரைப் போல், உயர்ந்த
வான் வீட்டைத் தமதாக்கிக் கொள்வதற்கான நன்மை அமைவதற்கே இடந்
தேடி முயல்வார்" என்று சூசை தனக்குள் சொல்லிக் கொண்டு, கடவுள்
திருவுளத்திற்கு அமைந்து வணங்குவானாயினான்.
| 71 |
பானேரப்
பாடியபண் கோகிற் கின்பம் பயவாப்போல்
வேனேரப் பாய்துயர்கொண் டிவற்றைக் கொன்னே
விளம்பியிவர்
நூனேரப் பாய்நெடிய மறுகிற் கெல்லா நொந்தொழுகிற்
கோனேரப் பாவியகை யிறையு மெண்ணுங் கொடுத்தனரே. |
| |
பால் நேரப்
பாடிய பண் கோகிற்கு இன்பம் பயவாப் போல்,
வேல் நேரப் பாய் துயர் கொண்டு, இவற்றைக் கொன்னே விளம்பி,
இவர்
நூல் நேரப் பாய் நெடிய மறுகிற்கு எல்லாம் நொந்து ஒழுகில்,
கோன் நேரப் பாவிய கையிறையும் எண்ணும் கொடுத்தனரே. |
பால் போல்
இனிக்கப் பாடிய பாடல் கழுதைக்கு இன்பம்
பயவாமைபோல், இவற்றையெல்லாம் அவ்வூரார்க்கு வீணே சொல்லி,
அதனால் வேல் பாய்வதற்கு நிகரான துயரமே பயனாகக் கொண்டு,
இவ்விருவரும் நூல் பிடித்து அமைந்த தன்மையாய்ப் பரந்து கிடந்த
நீண்ட தெருக்களுக்கெல்லாம் நொந்த வண்ணம் சென்று
கொண்டிருக்கையில், கொடுக்குமாறு அரசன் விதித்திருந்த வரிக்
காணிக்கையும் குடி எண்ணிக்கையும் கொடுத்து முடித்தனர்.
| 72 |
செய்முறையா
வையுந்திருந்தித் திறம்பா நீதிச் செலுந்தகவோர்
கைமுறையா மிறைதந்து மலர்த்தா ணல்லாள் கடிவருந்த
மொய்முறையாற் கடலொக்கு நகர மெல்லா முடுகியபின்
மைமுறையா லிரவினடு மருவக் கண்டு வளன்சொல்வான். |
|