பக்கம் எண் :

முதற் காண்டம்588

செய்முறை யாவையும் திருந்தி, திறம்பா நீதிச் செழுந்
                                      தகவோர்,
கை முறையாம் இறை தந்து, மலர்த்தாள் நல்லாள் கடி
                                      வருந்த,
மொய் முறையால் கடல் ஒக்கும் நகரம் எல்லாம் முடுகிய
                                      பின்,
மை முறையால் இரவின் நடு மருவக் கண்டு, வளன்
                                      சொல்வான்:

     மாறாத நீதியால் தழைத்த மாண்புள்ள சூசையும், மரியாளும், தாம்
செய்ய வேண்டிய கடமையெல்லாம் திருந்தச் செய்து, முறைப்படியான வரிக்
காணிக்கையும் தந்து, மலர் போன்ற அடி கொண்ட நல்லவளாகிய மரியாள்
மிகவே வருந்த, ஆரவாரத்தோடு மக்கள் மொய்க்கும் முறையால் கடலை
ஒத்திருக்கும் பெத்திலேம் நகரம் முழுவதும் விரைந்து அலைந்த பின்,
இருண்ட தன்மையாக நடு இரவு வரக் கண்டு, சூசை அவளை நோக்கிப்
பின் வருமாறு சொல்வான்:

 
                     73
"நிலத்தியல்பாற் றுளிநன்னீர் திரிந்த தோற்ற நிகரெனச்சேர்
குலத்தியல்பாற் கிழமைநிலை திரிகு மென்றார் குறைகிளரென்
கிலத்தியல்பாற் கிளைத்தனவிக் கேத மெல்லாங் கிடைத்துளைய
நலத்தியல்பாற் றகைநல்லாய் வருந்தி யென்னால் நகவானாய்.
 
"நிலத்து இயல்பால் துளி நல் நீர் திரிந்த தோற்றம் நிகர், என, சேர்
குலத்து இயல்பால் கிழமை நிலை திரிகும் என்றார்; குறை கிளர் என்
கிலத்து இயல்பால் கிளைத்தன இக் கேதம் எல்லாம் கிடைத்து உளைய,
நலத்து இயல்பால் தகை நல்லாய், வருந்தி என்னால் நகவு ஆனாய்!

     "நன்மையின் தன்மையால் மாண்பு கொண்ட நல்லவளே,
மழைத்துளியாகிய நல்ல நீர் தான் விழும் நிலத்தின் இயல்பால் நிறம் மாறிய
தோற்றத்திற்கு நிகராக, ஒருவர் சென்று சேரும் குலத்தின் தன்மையால்
தமக்கு உரிய மேலான நிலை மாறிக் கீழாகும் என்றார் அறிவுடையோர்;
அது போல, குறை நிறைந்த என் அற்பத்தனத்தின் இயல்பால்
கிளைத்தெழுந்த இத்துன்பமெல்லாம் உனக்குக் கிடைக்கப் பெற்று, மிகவே
வருந்தி, என்னால் நிந்தைக்கும் ஆளானாய்!