பக்கம் எண் :

முதற் காண்டம்59

வேயும் முத்தம் மிடைந்தன. வேலி வாய்
வேயும் முத்தம் மிடைந்தன. வேலை வாய்
வாயும் முத்தம் மலிந்தன. தீம் கழை
வாயும் முத்தம் மலிந்தன வாய் எலாம்.

     மூங்கில்களில் முத்துக்கள் செறிந்து கிடந்தன. வயல்களில் மேலே
மூடிக்கிடக்கும் நெல் முத்துக்கள் செறிந்து கிடந்தன. கடலில்
சங்குகளிடமாய் வாய்க்கும் முத்துக்கள் மலிந்து கிடந்தன. இடமெல்லாம்
இனிய கரும்புகளினின்று கிடைக்கும் முத்துக்கள் மலிந்து கிடந்தன.
 
                 81
செல்லின் மாரிதி ளைத்தென வள்ளியோர்
செல்லின் மாரிதி ளைத்தனர் வண்மையே
சொல்லின் மாரிசொ ரிந்தென வேதிலாச்
சொல்லின் மாரிசொ ரிந்தனர் வேதியார்
 
செல்லின் மாரி திளைத்து என, வள்ளியோர்
செல்லின், மாரி திளைத்தனர் வண்மையே.
சொல்லின் மாரி சொரிந்து என, ஏது இலாச்
சொல்லின் மாரி சொரிந்தனர் வேதியார்.

     மேகத்தால் ஆகிய மழை மிகுதியாகப் பொழிவதுபோல்,
வள்ளல்களிடம் இரவலர் சென்றால் வள்ளல்கள் கொடையே மழை போல்
மிகுதியாகப் பொழிந்தனர். தேன் மழை பொழிந்ததுபோல், வேதியராகிய
குருக்கள் குற்றமில்லாத உபதேசச் சொல்லை மழையாகப் பொழிந்தனர்.
 
              82
வாவி பங்கய மல்கிய நாண்மலர்
வாவி பங்கய மல்கிய மாண்பெனப்
பாவி யங்கிய லாப்பய னாகையாற்
பாவி யங்கிய யாப்பயன் சால்பரோ.
 
வாவு இபம் கயம் மல்கிய நாள் மலர்,
வாவி பங்கயம் மல்கிய மாண்பு என,
பாவி அங்கு இயலாப் பயன் ஆகையால்,
பா இயங்கிய யா பயன் சால்பு அரோ?