பக்கம் எண் :

முதற் காண்டம்590

                    75
உடைநகர்க்கண் வாழரசன் வறுமை நாடி உதிப்பச்சீர்
மிடைநகர்க்கண் பதியல்ல தென்றோ வின்னர் விலகி யெமக்
கிடைநகர்க்கண் ணிடமின்றி யிரிந்த தன்மை யிமிழிலினிப்
புடைநகர்க்கண் கண்டமுழை புணரப் போகிற் புரிவென்றான்.
 
"உடை நகர்க்கண் வாழ் அரசன் வறுமை நாடி உதிப்ப, சீர்
மிடை நகர்க்கண் பதி அல்லது என்றோ இன்னார் விலகி, எமக்கு
இடை நகர்க்கண் இடம் இன்றி இரிந்த தன்மை, இமிழில் இனிப்
புடை நகர்க்கண் கண்ட முழை புணரப் போகின் புரிவு" என்றான்.

     "தனக்கு உடைமையான மோட்ச நகரில் வாழும் அரசனாகிய
ஆண்டவன் வறுமையை விரும்பி ஏற்று வந்து பிறக்க, செல்வம் செறிந்த
நகரினிடத்து உறைவிடம் தக்கதன்று என்று அமைந்ததாலோ இந்நகரத்தார்
விலக்கக் கொண்டு, நமக்கு நடு நகரில் இடமின்றி அலைந்த தன்மைக்கு
இன்பத்தோடு இனிப் புற நகரில் கண்ட குகையை அடையப் போனால்,
அது விரும்பத்தக்கது" என்றான்.

                வானவர் சூழக் குகை வந்தடைதல்

     - விளம், - விளம், - மா, கூவிளம்.
 
               76
இத்தலை யிவளுநன் றென்று பேரோலி
மொய்த்தலை பெருங்கடல் நிகர்முற் றூர்கடந்
தத்தலை யிருமையோ ரமரர் செய்யொளி
மைத்தலை நடுநிசி மயங்கப் போயினார்.
 
இத் தலை இவளும் நன்று என்று, பேர் ஒலி
மொய்த்து அலை பெருங் கடல் நிகர் முற்று ஊர் கடந்து,
அத் தலை, இருமையோர், அமரர் செய் ஒளி
மைத்து அலை நடு நிசி மயங்க, போயினார்.