பக்கம் எண் :

முதற் காண்டம்594

               83
உயரிய வரைபகி ருறுப்பு போன்றெனப்
பெயரிய கன்மிசைப் பெருங்கல் சேர்த்திய
துயரிய றோன்றிடம் விலங்கு துன்னிட
மயரிய விடமொரு முழையஃ தாமரோ.
 
உயரிய வரை பகிர் உறுப்பு போன்று எனப்
பெயரிய கல்மிசைப் பெருங்கல் சேர்த்திய
துயர் இயல் தோன்று இடம், விலங்கு துன் இடம்,
அயரிய இடம் ஒரு முழை, அஃது, ஆம் அரோ.

     அவ்விடம், உயரமான மலையைப் பிளந்தெடுத்த உறுப்புப் போன்றது
என்னும் படியாய்ப் பெயர்ந்து கிடந்த கல்லின்மீது ஒரு பெரிய கல்லைப்
பொருத்திவைத்ததாகிய துன்பத்தன்மை கொண்டுள்ள இடமாய், விலங்குகள்
ஒதுங்கும் இடமாய், சோர்வு தரும் இடமாய் அமைந்த ஒரு குகை ஆகும்.

     
'அரோ' அசைநிலை. 'விலங்கு' எனப் பொதுப்படச் சொல்லியிருப்பினும்,
ஆடு மாடு கழுதை போன்ற நாட்டு விலங்குகளே கொள்க.
 
               84
வீசறை வளிமழை விளிப்ப வாய்திறந்
தேசறை கிழவிதீ யெரிமு கத்தொடு
பாசறை பரிப்புநோய் பதிப யிற்றிய
வாசறை யுருவெனா முழையஃ தாமரோ.
 
வீசு அறை வளி மழை விளிப்ப வாய் திறந்து,
ஏசு அறை கிழவி தீ எரி முகத்தொடு,
பாசறை பரிப்பு நோய் பதி பயிற்றிய
ஆசு அறை உரு என் ஆம் முழை அஃது
                         ஆம் அரோ.

     வீசி அடிக்கும் காற்றையும் மழையையும் உள்ளே அழைத்த
தன்மையாய்த் தன் வாயைத் திறந்துகொண்டு, ஏச்சு மொழிகளைச் சொல்லும்
கிழவியின் தீ எரியும் முகத்தை ஒத்திருந்து, துன்பமும் அச்சமும் நோயும்
குடிகொண்டிருக்குமாறு, குற்றங்களே ஓர் அறையாக உருவெடுத்து
வந்துள்ளன என்று சொல்லத் தக்க ஒரு குகையாகும் அது.