பக்கம் எண் :

முதற் காண்டம்595

               85
கலங்கெழுந் திரையெறி கடலெ னாநகர்ப்
புலங்கெழு மிடைமனுப் புழங்க லாமையும்
விலங்கெழு மிடமெனா வெறுத்த வம்முழை
நலங்கெழு மிறையவன் பிறப்ப நாடினான்.
 
கலங்கு எழும் திரை எறி கடல் எனா நகர்
புலம் கெழு மிடை மனு புழங்கலா மையும்,
விலங்கு எழும் இடம் எனா வெறுத்த அம்முழை,
நலம் கெழும் இறையவன் பிறப்ப நாடினான்.

     கலங்கி எழும் அலைகளை எறியும் கடல்போல் அந்நகரின்
இடமெல்லாம் செறிந்து நிறைந்த மனிதர் எவரும் சென்று புழங்காமல்
இருத்தலோடு, விலங்குகளே தங்கும் இடம் என்று வெறுத்ததுமாகிய
அக்குகையிலேயே, நலமெல்லாம் செறியும் ஆண்டவன் பிறக்க
விரும்பினான்.
 
              86
ஒப்புடை யுயரினோ ருவந்து புக்கபின்
னப்புடை விளக்கிட வருத்தி காண்மணித்
துப்புடை யுருக்கொடு சூழ்ந்த வானவர்
வெப்புடை விருப்பொடு விளக்கி னாரரோ.
 
ஒப்பு உடை உயரினோர் உவந்து புக்க பின்,
அப் புடை விளக்கிட அருத்தி காண் மணித்
துப்பு உடை உருக் கொடு சூழ்ந்த வானவர்
வெப்பு உடை விருப்பொடு விளக்கினார் அரோ.

     ஒப்புமையெல்லாம் உடைத்தெறிந்த உயர்ந்தோராகிய சூசையும்
மரியாளும் மகிழ்ந்து அக்குகைக்குள் புகுந்த பின், அப் பக்கமெல்லாம்
துப்புரவு செய்ய அவர்கள் கொண்ட ஆசையை வானவர் கண்டனர்.
மணி போன்ற தூய்மையான உருவத்தோடு சூழ்ந்து நின்ற அவ்வானவர்
தாமே விரைவு கொண்ட விருப்பத்தோடு அதனைத் தூய்மை செய்தனர்.

     'அரோ' அசைநிலை.