பக்கம் எண் :

முதற் காண்டம்597

                 89
அருப்பய னஞ்சினை யாக்கும் பாம்பெனா
விருப்பவர் நயன்செயப் பகைக்கு மேலலார்
நெருப்படத் துமிப்பரை நிழற்றுங் காவெனாப்
பெருப்பகை செய்வரைப் பேணு மாட்சியார்.
 
அரும் பயன் நஞ்சினை ஆக்கும் பாம்பு எனா,
விருப்பவர் நயன் செயப் பகைக்கும் மேல் அலார்.
நெருப்பு அடத் துமிப்பரை நிழற்றும் கா எனா,
பெரும் பகை செய்வரைப் பேணும் மாட்சியார்.

     அரிய பாலையும் நஞ்சாக்கும் பாம்புபோல், அன்புடையோர்
நன்மை செய்யவும் மேன்மையற்றவர் அவரைப் பகைப்பர். நெருப்பிலிட்டுச்
சுடுமாறு தன்னை வெட்டுவோரை நிழல் தந்து பேணும் காட்டைப்போல,
மாண்புடையோர் தமக்குப் பெரும் பகை செய்வாரையும் பேணுவர்.

     இது முந்திய பாடலுக்கு விளக்கம் கூறியது. அருப்பயன், பெருப்பகை
என்பன வலித்தல் விகாரம். பகைக்கும், பேணும் என, 'செய்யும்' என்
முற்று பலர் பாலுக்கு வந்தது புதியன புகுதலாகக் கொள்க. 'நெருப்பு
அடத் துமிப்பரை நிழற்றும் 'கா' என்பது, 'மாந்தர், குறைக்குந்தனையுங்
குளிர்நிழலைத் தந்து, மறைக்குமாங் கண்டீர் மரம்' என்ற வாக்குண்டாம்
(30) உவமையைச் சுருக்கிக் கூறுதல் காண்க.
 
                   90
எஃகெனப் பாய்ந்துள மிரிந்த வான்றுய
அஃகெனக் கண்படற் கமைதி யென்றனள்
வெஃகெனத் துணைவியே விலகித் தானுநல்
இஃதெனத் தனித்திறை யிறைஞ்சி நின்றனன்.
 
"எஃது எனப் பாய்ந்து உளம் இரிந்த வான்துயர்
அஃகு எனக் கண்படற்கு அமைதி" என்றனள்.
வெஃகு என, துணைவியே விலகி, தானும், "நல்
இஃது" என, தனித்து இறை இறைஞ்சி நின்றனன்.    

     "வேல் போல் பாய்ந்து உள்ளத்தைச் சாய்த்த இப் பெருந் துயரம்
குறையுமாறு துயில் கொள்ள அமைக" என்றாள். சூசை தானும், அதனையே
விரும்பியது போல் "இதுவே நல்லது" என்று கூறி, தன் துணைவியை விட்டு
விலகி தனித்துப் போய் ஆண்டவனை வணங்கி நின்றான்.