பக்கம் எண் :

முதற் காண்டம்599

     நிறைவான மகிழ்ச்சியைப் பொழிந்து, தன்னுள் அருள் வாய்ந்து
முதிர்ந்து தோன்றும் கண்களை உடைய மரியாள் முழந்தாளிட்டு நின்று,
இவ்வுலகில் எதிராகக் கூறப்படும் ஒப்புமை ஒன்றுமின்றி இன்புறுமாறு,
ஒளியைக் கொண்டுள்ள தன் மகன் தன் வயிற்றினுள் அசையக் கண்டாள்.

     முழந்து - 'முழந்தாள்' என்பது கடைக் குறையாய் நின்றது.
 
             93
திருமு கஞ்செறி சுடர்ச்சி றப்பினா
லொருமு கஞ்செறி யொளிக ளாயிரந்
தருமு கம்பகற் றருக காலமாய்க்
குருமு கங்கொளுங் குணக்கொத் தாளரோ.
 
திரு முகம் செறி சுடர்ச் சிறப்பினால்,
ஒரு முகம் செறி ஒளிகள் ஆயிரம்
தரு முகம் பகல் தருக காலம் ஆய்,
குரு முகம் கொளும் குணக்கு ஒத்தாள் அரோ.

     அவள் தன் திருமுகத்தில் செறிந்த ஒளியின் சிறப்பினால், ஒரு
முகத்தில் செறிந்த ஒளிக் கதிர்கள் ஆயிரம் கொண்டுள்ள முகத்தை
உடைய ஆதவன், பகலைத் தருவதற்குரிய காலம் ஆகும்போது,
செந்நிறத்தைத் தன் முகத்தில் கொண்டு விளங்கும் கீழ்த்திசையை
ஒத்திருந்தாள்.

     'அரோ' அசைநிலை.

            94
உலக மூன்றினு முவமை நீக்கிய,
விலயை மூன்றினு மிழிவில் கன்னியா
யலகில் மூன்றினு ணடுவ மைந்தனை
நிலவு மூன்றினு நிறப்ப வீன்றனள்.
 
உலகம் மூன்றினும் உவமை நீக்கிய,
இலயை மூன்றினும் இழிவு இல் கன்னியாய்,
அலகு இல் மூன்றினுள் நடுவ மைந்தனை,
நிலவு மூன்றினும் நிறப்ப ஈன்றனள்.