பக்கம் எண் :

முதற் காண்டம்601

     மார்கழி மாதத்தின் நாள் இருபத்தைந்து ஆகையில், குற்ற மற்ற
இரவின் கண் நாழிகை பதினைந்து நிறைகையில், வாரத்தின் முதல் நாள்
எனப்படும் ஞாயிற்றுக் கிழமையன்று, அன்புள்ள தலைவியாகிய மரியாள்
எல்லாவற்றிற்கும் ஆதியாக விளங்கும் ஆண்டவனைக் களிப்போடு
மகனாகப் பெற்றுத் தந்தாள்.

     'மார்கழி இருபத்தைந்து' என்பது மார்கழி மாதத்தில் வரும் டிசம்பர்
இருபத்தைந்து என்று அறிக. பகல் முப்பதும் இரவு முப்பதுமாக நாளுக்கு
நாழிகை அறுபதாகையால், இரவு பதினைந்து நாழிகை நள்ளிரவு எனவும்,
அப்போதைக்கு உரிய ஆதிநாள் எனவே, சனிக்கிழமை நிறைந்து
ஞாயிற்றுக் கிழமை தொடங்கும் நேரம் எனவும் அறிக. கடவுள் மகன்
மனிதனாகப் பிறந்த இரவாதலின், 'ஏதிலா நிசி,' எனப்பட்டது.
 
            97
தீப முற்றுமே லுலவு செஞ்சுடர்
சாப முற்றுழி சாபந் தீர்த்தெமை
யாப தத்திறை யளிப்பத் தாய்மடித்
தாப தத்தெழீஇத் தரையி றோன்றினான்.
 
தீபம் உற்று மேல் உலவு செஞ் சுடர்
சாபம் உற்ற உழி, சாபம் தீர்த்து எமை
ஆபதத்து, இறை, அளிப்ப, தாய் மடி
தாபதத்து எழீஇத் தரையில் தோன்றினான்.

     உலகத்திற்கு விளக்காக அமைந்து வான்மேல் உலாவும் பகலவன் தனு
இராசியைச் சேர்ந்து நின்ற காலத்தில், பாவத்தால் விளைந்ந சாபத்தைத்
தீர்த்து நம்மையெல்லாம் துன்பத்தினின்று மீட்டுக் காக்கும் பொருட்டு,
இறைவன் தன் தாயின் வயிற்றில் தவக்கோலத்தோடு எழுந்து தரையில்
தோன்றினான்.

     ஞாயிறு ஒவ்வொரு மாதமும் ஒவ்வோர் இராசியில் இருக்கும். மார்கழி
மாதத்திற்கு உரியது தனு இராசி. அது வில் எனப் பொருள்படுமாதலின்,
வில்லைக் குறிக்கும் 'சாபம்' என்ற பெயரால் குறிக்கப் பெற்றுது. 'மடி'
வயிற்றிற்கு ஆகுபெயர்.

     இப்பாடல் அடிக்குறிப்பில் பதிப்பாசிரியர், "இவ்விருத்தத்தை
வீரமாமுனிவர் தமது கையெழுத்துப்பிரதியிலே மாற்றி, உரைமாற்றாது
விடுத்தார். ஆதலால், அதற்கு உரையைப் பொருத்தி இப்படலத்தில் அச்சிற்