பக்கம் எண் :

முதற் காண்டம்603

             99
கதிர்செய் தேரெழக் கடிய கோனிசி
பொதிர்செய் காரிருட் புதைப்பப் புக்கல்போற்
பிதிர்செய் பேயெலாம் பெயர்ந்து தீயுற
வெதிர்செய் யாதியீங் கிலங்கி னானரோ.
 
கதிர் செய் தேர் எழ, கடிய கோல் நிசி
பொதிர் செய் கார் இருள் புதைப்பப் புக்கல் போல்,
பிதிர் செய் பேய் எலாம் பெயர்ந்து தீ உற,
எதிர் செய் ஆதி ஈங்கு இலங்கினான் அரோ.

     கதிரைப் பொழிந்த கதிரவனின் தேர் எழவும், கொடுங்கோன்மை
புரியும் இரவில் நிறைந்து நின்ற கரிய இருளினிடையே தாமும் புதையுண்டு
புகுந்தாற்போல, எங்கும் சிதறிக் கிடந்த பேய்களெல்லாம் இவ்வுலகைவிட்டு
நீங்கி நரகத் தீயில் சென்று சேர, அவற்றிற்கு எதிராக வந்து பிறந்த
ஆதிப்பொருளாகிய ஆண்டவன் இவ்வுலகில் விளங்கித் தோன்றினான்.

     'அரோ' அசைநிலை. புக்கல்-புகல்: 'புகு' என்பது பகுதி. புக்கு
என்பதே பகுதி போலக்கொண்டு இத்தொழிற் பெயர் அமைந்துள்ளது.

 
            100
பேயும் போயின வமரர் பிந்தினர்
தீயும் போயின வறங்க டேறின
நோயும் போயின நூற்க டேர்ந்தன
தோயு மோகையிற் றுளங்க வையமே.
 
பேயும் போயின; அமரர் பிந்தினர்;
தீயும் போயின; அறங்கள் தேறின;
நோயும் போயின; நூற்கள் தேர்ந்தன,
தோயும் ஓகையில் துளங்க வையமே.

     இம்மண்ணுலகம் திளைக்கும் இன்பத்தினால் துலங்குமாறு,
பேய்களெல்லாம் ஓடின; வானவர் தொடர்ந்து வந்து சேர்ந்தனர்.
தீமைகளும் நீங்கிச் சென்றன; புண்ணியங்கள் தழைத்தன, நோய்களும்
அகன்று மறைந்தன. அறநூல்கள் ஓங்கி வளர்ந்தன.