பக்கம் எண் :

முதற் காண்டம்604

     'அமரர் பிந்தினர்' என்றது, பேய்கள் போயின விரைவைக் கருதியது,
மேலும், இங்குக் குறித்த 'அமரர்', அங்கு ஏற்கெனவே சூழ நின்றவரல்லாத
ஏனையோரைக் குறித்தது.
 
              101
இரவின் மீன்களு மிரவி பின்றையும்
பரவி னாலெனப் பரப்புந் தங்கதிர்
புரவி னேழ்மடங் கொளிர்ந்தப் பொற்பினை
விரவின் காணக் கண் விளக்கல் மானுமே.
 
இரவில் மீன்களும் இரவி பின்றையும்
பரவினால் எனப் பரப்பும் தம் கதிர்
புரவின் ஏழ் மடங்கு ஒளிர்ந்து, அப்பொற்பினை
விரவின் காணக் கண் விளக்கல் மானுமே.

     இரவில் விண்மீன்களும் கதிரவன் பின் வந்த பகலிலும் தொழுதாற்
போலப் பரப்பும் தம் கதிர்கள் வழக்கமாகத் தருதலினும் ஏழு மடங்காக
ஒளிர்ந்து, அவ்வழகுமயமான குழந்தையை நன்றாகக் காணத் தம்
கண்களை விளக்கிக் கொண்டதைப் போல் தோன்றும்.

     முன் இரவைச் சொல்லிப் பின் 'பின்றை' என்றது, பின் வரும் பகலைக்
குறித்தது. 'பொற்பு' பொற்புள்ள குழந்தைக்கு ஆகு பெயர். 'குழந்தையின்
பொற்பு' என நேரே கொள்ளினும் அமையும்.
 
              102
பாய்ந்த வான்றருப் பருவ மின்றியு
மீய்ந்த தீங்கனி யியையப் பூத்தலும்
வேய்ந்த நாயகன் விளைத்த நன்றியால்
வாய்ந்த ஓகையின் முறுவல் மானுமே.
 
பாய்ந்த வான் தரு, பருவம் இன்றியும்,
ஈய்ந்த தீம் கனி இயையப் பூத்தலும்,
வேய்ந்த நாயகன் விளைத்த நன்றியால்
வாய்ந்த ஓகையின் முறுவல் மானுமே.