|
கிளை படர்ந்த
பெரிய மரங்கள், அது மலர் தரும் பருவம்
அல்லாதிருந்தும், தாம் தந்து நின்ற இனிய கனிகளோடு இயையப் பூத்து
நின்றன. அது, மனித உடலை அணிந்துகொண்ட ஆண்டவன் விளைவித்த
நன்மையால் அமைந்த இன்பத்தினால் சிரித்தது போல் தோன்றும்.
| 103 |
பொதிர்செய்
மாட்சி கொண் டுயர்ந்த பூவெலாங்
கதிர்செய் வானநேர் களித்த தாமெனி
லெதிர்செய் பாப்புகழ்ந் திசைக்குந் தன்மையோ
முதிர்செய் மாண்புடை முழையின் றோற்றமே. |
| |
பொதிர் செய்
மாட்சி கொண்டு உயர்ந்த பூ எலாம்
கதிர் செய் வானம் நேர் களித்தது ஆம் எனில்,
எதிர் செய் பாப் புகழ்ந்து இசைக்கும் தன்மையோ,
முதிர் செய் மாண்பு உடை முழையின் தோற்றமே? |
நிறைவான இம்
மாண்பு கொண்டு உயர்ந்த பூவுலகம் முழுவதும்
ஒளிபடைத்த வானுலகத்திற்கு நிகராகக் களிப்புற்றதென்றால், முதிர்ந்த
மாண்பு கொண்ட அந்தக் குகையின் தோற்றம், ஒப்புமை காட்டும்
பாடலால் புகழ்ந்து கூறக் கூடிய தன்மையுள்ளதோ?
| 104 |
வானு
லாவனப் பெண்ணில் வானவர்
மீனு லாவடி யிறைஞ்சி மீதுபெய்
கானு லாமலர்க் கந்த மாரியாற்
றேனு லாமழை திளைத்தோர் பாலெலாம். |
| |
வான் உலா வனப்பு
எண் இல் வானவர்
மீன் உலாவு அடி இறைஞ்சி, மீதுபெய்
கான் உலா மலர்க் கந்த மாரியால்,
தேன் உலா மழை திளைத்து ஓர் பால் எலாம். |
வானுலகில் உலவும்
அழகைக் கொண்ட எண்ணிக்கையற்ற வானவர்
திருக்குழந்தையின் ஒளி பொருந்திய அடியை வணங்கி, அதன் மீது
பொழிந்த காடாகப் பூத்த மலர்களின் வாசனை மழையால், ஒரு
பக்கமெல்லாம் தேனோடு கூடிய மழையில் திளைத்துக் கிடந்தது. |