பக்கம் எண் :

முதற் காண்டம்607

           107
சந்த நற்சுதை நான சாயலின்
வந்த நற்சுதை மணங்கொள் காழகில்
வெந்த நற்புகை கலந்து வீங்கின
கந்த நற்சுவை, கனிவோர் பாலெலாம்.
 
சந்த நல்சுதை, நான சாயலின்
வந்த நல் சுதை, மணம் கொள் காழ் அகில்
வெந்த நல் புகை கலந்து, வீங்கின
கந்த நல் சுவை கனிவு ஓர் பால் எலாம்.

     நல்ல சந்தனச் சாந்தும், மென்மையோடு கூடிய நல்ல கஸ்தூரிச்
சாந்தும், மணம் கொண்ட வயிரம் பாய்ந்த அகிற்கட்டை வெந்து தந்த
நல்ல புகையும் கலந்து பெருகிய வாசனையின் நல்ல சுவை, ஒரு
பக்கமெல்லாம் கனிவு தந்தது.

     'தந்தது' என்ற சொல் வருவித்து முடிக்கப்பட்டது.
 
               108
மெய்த்தி றத்தெழுந் துதித்த வேந்தனைக்
கைத்தி றத்தெழுந் திறைஞ்சுங் காதலான்
மொய்த்தி றத்தெழுங் கடலின் மொய்த்தவார்ப்
பிய்த்தி றத்தெழுந் தெல்லை யில்லையே.
 
மெய்த் திறத்து எழுந்து உதித்த வேந்தனைக்
கைத் திறத்து எழுந்து இறைஞ்சும் காதலால்,
மொய்த் திறத்து எழும் கடலின், மொய்த்த ஆர்ப்பு
இய்த் திறத்து எழுந்து, எல்லை இல்லையே.

     வானினின்று எழுந்து வந்து உடலெடுத்த தன்மையாய்ப் பிறந்த
மன்னனாகிய குழந்தை நாதனைத் தம் கைகளில் எடுத்து வைத்து வணங்க
வேண்டுமென்ற ஆசையால், அலைகள் மோதும் போது எழும் கடலின்
ஆரவாரம் போல், அங்கு வந்து திரண்ட வானவரின் ஆரவாரம்
இத்தன்மையாய் எழுந்து, எல்லை இல்லாது பெருகிற்று.

     'இத்திறத்து' என்பது, எதுகைப் பொருட்டு 'இய்த்திறத்து' என நின்றது.