பக்கம் எண் :

முதற் காண்டம்608

             குழந்தையை ஏந்திய தாயின் உவகை

     - மா, கூவிளம், கூவிளம், கூவிளம்
 
               109
சொக்க ளாவுருத் தோன்றிய தோன்றலை
மிக்க யேலொடு காபிரி யேல்விழைந்
தொக்க வேந்தின ரொக்கவுந் தாய்முனர்
மக்க ணாதனை மாண்பெழக் காட்டினார்.
 
சொக்கு அளாவு உருத் தோன்றிய தோன்றலை
மிக்க யேலொடு காபிரியேல் விழைந்து
ஒக்க ஏந்தினர்; ஒக்கவும் தாய் முனர்
மக்கள் நாதனை மாண்பு எழக் காட்டினர்.

     அழகு பரந்த உருவத்தோடு தோன்றிய அத்திருமகனை மிக்கயேலோடு
காபிரியேல் எனப்படும் வானவர் இருவரும் ஒன்றாகக் கூடி விருப்பத்தோடு
கையில் ஏந்தி எடுத்தனர்; பின், மக்களுக்கெல்லாம் ஆண்டவனாகிய
அவ்வாண்டவனை மாண்போடு இருவருமாகவே தாய் முன் கொணர்ந்து
காட்டினர்.
 
                 110
பொதிர்கொள் பூமணம் போன்மக வீன்றனள்
கதிர்கொள் சேயொடு கண்கள்க லந்தகா
லெதிர்கொள் வெஞ்சுடர் காண்முழு விந்தெனா
முதிர்கொ ளின்பமு கத்துவி ளங்கினாள்.
 
பொதிர் கொள் பூ மணம் போல் மகவு ஈன்றனள்,
கதிர் கொள் சேயொடு கண்கள் கலந்த கால்,
எதிர் கொள் வெஞ் சுடர் காண் முழு இந்து எனா,
முதிர் கொள் இன்ப முகத்து விளங்கினாள்.

     இதழ்கள் செறிந்த பூவினின்று எழும் மணம் போல் மகனைப்
பெற்றெடுத்த மரியாள், ஒளி பொருந்திய அம்மகனோடு தன் கண்கள்
கலந்தபோது, எதிர்த் திசையில் நின்ற பகலவனைக் காணும் முழு
மதிபோல, இன்பம் முற்றிய முகத்தோடு விளங்கினாள்.