பக்கம் எண் :

முதற் காண்டம்609

     பூவும் அதன் மணமும் அழிந்தே கனி தோன்றுதல் இயல்பு.
மரியாள் தன் கன்னிமை அழியாமல் பூவாகவே இருந்துகொண்டு, அப்
பூ தன் மணத்தைப் பரப்புவதுபோல் மகனைப் பெற்றாள் என்று உவமைப்
பொருளை விரித்துக் கொள்க.
 
              111
தன்னை ஈன்றன தாய்தனை நோக்கலோ
டன்னை நீயுமென் சாயலி னாகெனா
மின்னை வீறிய தோன்றல்வி ளம்பினா
னென்னை யாள்பவ ளின்பலை மூழ்கவே.
 
தன்னை ஈன்றன தாய்தனை நோக்கலோடு,
"அன்னை, நீயும் என் சாயலின் ஆகு" எனா,
மின்னை வீறிய தோன்றல், விளம்பினான்,
என்னை ஆள்பவள் இன்பு அலை மூழ்கவே.

     மின்னலையும் ஒளியால் மிஞ்சிய அம்மகன், தன்னைப் பெற்ற தாயைப்
பார்த்ததுமே, "தாயே, நீயும் என் சாயலுக்கு ஒத்த விதமாய் இருப்பாயாக"
என்று, என்னை அடிமையாகக் கொண்டு ஆளும் அவள் இன்பக் கடலில்
மூழ்குமாறு, சொன்னான்.

     ஈன்றன - ஈன்ற : பெயரெச்சம் இடையே 'அன்' சாரியை பெற்று
நின்றது.
 
             112
தந்தை யீன்றன தாயுந்தன் சேயனை
யிந்தை நேர்நுதல் தாழ்ந்திறைஞ் சிட்டபின்
சிந்தை யோங்கம ரரவள் செங்கையின்
முந்தை தோன்றலைத் தந்துமுன் னேற்றினார்.
 
தந்தை ஈன்றன தாயும், தன் சேயனை
இந்தை நேர் நுதல் தாழ்ந்து இறைஞ்சிட்டபின்,
சிந்தை ஓங்கு அமரர், அவள் செங் கையின்
முந்தை தோன்றலைத் தந்து, முன் ஏற்றினார்.