பக்கம் எண் :

முதற் காண்டம்61

இரண்டாவது
 

நகரப் படலம்
 

     வளன் பிறந்த சூதேய நாட்டின் தலைமைப் பதியாகிய எருசலேம்
நகரத்தின் சிறப்பைக் கூறும் பகுதி.

                   எருசலேம் பெருமை

     -விளம், -மா, தேமா, - விளம், -மா, தேமா
   
                      1
மெய்வ்வழி மறைநூ னீங்கி வியனுல கினிதென் றின்னா
வவ்வழி வுற்ற தென்ன வதிந்தெமை யளித்துக் காக்கச்
செவ்வழி யுளத்த தூயோன் றெரிந்தமா நகரி தென்றா
லிவ்வழி பின்ன ருண்டோ வெருசலே நகரை வாழ்த்த.
 
மெய் வழி மறை நூல் நீங்கி, வியன் உலகு இனிது என்று,
                                       இன்னா
வவ்வு அழிவு உற்றது என்ன, வதந்து எமை அளித்துக்
                                       காக்கச்
செவ் வழி உளத்த தூயோன் தெரிந்த மா நகர் இது என்றால்
இவ் வழி பின்னர் உண்டோ எருசலேம் நகரை வாழ்த்த?

     பரந்த இவ்வுலக வாழ்க்கையே இனிதென்று மதித்து, வேத நூல்
நாட்டிய உண்மையான வழியை விட்டு விலகியதனால், பாவமாகிய
துன்பத்தினால் கவரப்பட்டு இவ்வுலகம் அழிவுக்கு ஆளாகிய தென்று கண்டு,
செம்மையான வழியிலேயே செல்லும் உள்ளத்தைக் கொண்ட தூயவனாகிய
ஆண்டவன் தானே இவ்வுலகிற்கு வந்து தங்கியிருந்து நம்மையெல்லாம்
மீட்டுக் காக்கவென்று தெரிந்து கொண்ட பெரிய நகரம் இது என்றால்,
எருசலேம் நகரை வாழ்த்த இந்த முறைமைக்குப் பின்னரும் சிறந்த
வேறொன்று உண்டோ?