2 |
ஆளெனை
யுடைய நாத னவனியுண் மனுவாய்த் தூய்தன்
றாளிணை தாங்கிற் றென்னத் தாழவா னவரு மாக்கள்
கோளினை யுடைவான் வீட்டைக் குறுகவும் வழியீ தென்றால்
மீளிணை வருந்தி நாடி வியனகர் புகழ்வ ராரோ. |
|
ஆள்
எனை உடைய நாதன் அவனியுள் மனு ஆய்த் தூய் தன்
தாள் இணை தாங்கிற்று என்னத் தாழ வானவரும், மாக்கள்
கோளினை உடை வான் வீட்டைக் குறுகவும் வழ ஈது என்றால்,
மீள் இணை வருந்தி நாடி வியன் நகர் புகழ்வர் ஆரோ? |
என்னை அடிமையாகக்
கொண்டுள்ள ஆண்டவன் இவ்வுலகில்
மனிதனாய் அவதரித்து வந்த காலத்து அவனது இரண்டு தூய
திருவடிகளையும் இதுவே தாங்கிற்று என்ற பெருமையால், வான வரும்
இறங்கி வந்து பணியவும், மானிடர் விண்மீன்களை உடைய வான வீட்டிற்கு
ஏறிச் சென்று அணுகவும் இதுவே வழி என்றால், மீண்டும் வருந்தி இப்
பரந்த நகருக்கு ஒப்புத் தேடிப் புகழ முற்படுவார் யாரோ?
3 |
விட்புல
னகன்று வாய்த்த வீட்டிடை வழங்கு மாட்சி
கட்புல னகன்ற தென்னக் கருதியோ ருவமை காட்ட
மட்புல னிணங்கு மின்ன மாநக ரிணையென் றோதி
யுட்புலன் கடந்த நாத னுயர்நகர் புகழு மாறே. |
|
விண்
புலன் அகன்று வாய்த்த வீட்டு இடை வழங்கு மாட்சி
கண் புலன் அகன்றது என்னக் கருதி ஓர் உவமை காட்ட
மண் புலன் இணங்கும் இன்ன மாநகர் இணை என்று ஓதி
உள் புலன் கடந்த நாதன், உயர் நகர் புகழும் ஆறே. |
ஆகாய மண்டலத்தையும்
தாண்டி அமைந்துள்ள மோட்சத்தில் நிலவும்
மாட்சிமை கண் என்னும் புலனுக்கு எட்டக் கூடிய தன்று என்று கருதி,
அதற்கு ஓர் ஒப்புமை காட்ட, நம் உள்ளம் என்னும் புலனையும் கடந்த
ஆண்டவனே மண்ணுலகிற் பொருந்தும் இந்தப் பெரிய நகரத்தை அதற்கு
ஒப்பென்று கூறினான். இந்த உயர்ந்த நகரத்தைப் புகழும் தன்மை இதுவாம்.
விட்புலன்,
மட்புலன் என்றவிடத்துப் 'புலன்' 'புலம்' என்ற சொல்லின்
கடைப்போலி.
|