பக்கம் எண் :

முதற் காண்டம்611

     செவ்வாம்பல் மலரின் மேல் மணம் கமழும் செந்தாமரை மலர்
அமைந்தது போல, தன் உயிர் போன்ற மகனைத் தன் அழகிய கைகளில்
ஏந்தினாள்; துன்புற்று மயங்கிய மனித உயிர்களை நினைந்து, அருள்
கூர்ந்து, யாவற்றிற்கும் முந்திய தந்தையாம் கடவுளை நோக்கிப்
பின்வருமாறு கூறுவாள்:
 
               115
உனக்கு மாகியெ னக்குமோர் பிள்ளையாய்த்
தனக்கு நேரிழந் தார்தக வோன்றனை
நினக்கு நானிவ ணேர்தலின் மற்றுயிர்க்
கெனக்கு நேரரு ளீந்தளிப் பாயென்றாள்.
 
"உனக்கும் ஆகி, எனக்கும் ஓர் பிள்ளை ஆய்,
தனக்கு நேர் இழந்து ஆர் தகவோன் தனை
நினக்கு நான் இவண் நேர்தலின், மற்று உயிர்க்கு
எனக்கு நேர் அருள் ஈந்து அளிப்பாய்" என்றாள்.

     "உனக்கும் பிள்ளை ஆகி, எனக்கும் ஒரு பிள்ளை ஆகி, தனக்கு
ஒப்புமை எதுவும் இல்லாது நிறைந்த பெருமைக்குரிய இம்மகனை உனக்கு
நான் காணிக்கையாக இங்கு நேர்ந்து தருவதன் மூலம், எனக்கு நீ
செய்துள்ள அருளை ஏனைய உயிர்களுக்கும் தந்து காப்பாய்" என்றாள்.
 
             116
ஊக்கி வாழவு ணர்ந்தற மாதியிற்
போக்கி னார்புரை பொங்கிம லிந்ததீச்
சீக்கி வாழ்விட வெய்திய சேய்முக
நோக்கி னாற்சின நூக்கரி தோவென்றாள்.
 
"ஊக்கி வாழ உணர்ந்து அறம் ஆதியில்
போக்கினார் புரை பொங்கி, மலிந்த தீச்
சீக்கி வாழ்வு இட எய்திய சேய் முகம்
நோக்கினால், சினம் நூக்கு அரிதோ?" என்றாள்.

     "தம் நிலையினும் மேலாக வாழ நினைந்து ஊக்கம் கொண்டு,
உலகத் தொடக்கத்தில் அறத்தைப் போக்கடித்த ஆதிப் பெற்றோரின்
பாவம் பொங்கி, அதனால் பெருகிய தீமையை நீக்கி வாழ்வளிக்க வந்த
உன் மகனின் முகத்தை நோக்கினால், பாவத்தால் கொண்ட உன்
சினத்தை நீக்குதல் அரிய செயலாகுமோ?" என்றும் சொன்னாள்.