பக்கம் எண் :

முதற் காண்டம்612

               117
மறஞ்செய் வேடமெ னாமனு வேடமே
நிறஞ்செய் தெய்வத மூடிய நீர்மையா
லறஞ்செய் தானெம தார்துகள் மூடலிற்
றிறஞ்செய் காய்ந்தசி னத்திட மேதென்றாள்.
 
"மறம் செய் வேடம் எனா, மனு வேடமே
நிறம் செய் தெய்வதம் மூடிய நீர்மையால்
அறம் செய் தான் எமது ஆர் துகள் மூடலின்
திறம் செய் காய்ந்த சினத்து இடம் ஏது" என்றாள்.

     "பாவம் பொருத்தி வைத்த கோலம் என்றபடி, ஒளி பொருந்திய
தெய்வத் தன்மையை மனித வேடத்தால் மூடி மறைத்த தன்மையால் அறமே
செய்த அவ்வாண்டவன் தானே எமது நிறைவான பாவங்களையெல்லாம் மூடி
மறைத்து விடுதலால், வல்லமையோடு கொதித்துநின்ற உன் சினத்துக்கு இனி
இடம் ஏது?" என்றும் அடுத்துக் கூறினாள்.
 
               118
தாய்வி ழைந்தந லந்தரு சேயனே
நீய்வி ழைந்ததுன் பூட்டிட நேமியே
மீய்வி ழைந்த நலமிடைந் தூட்டி நீ
தீய்வி ழைந்தசெ யிர்செகுப் பாயென்றாள்.
 
"தாய் விழைந்த நலம் தரு சேயனே,
நீய் விழைந்த துன்பு ஊட்டிட, நேமியே
மீய் விழைந்த நலம் மிடைந்து ஊட்டி நீ,
தீய் விழைந்த செயிர் செகுப்பாய்" என்றாள்.

     பின் தன் மகனையே நோக்கி, "தாய் விரும்பிய நலமெல்லாம் தரும்
இயல்புள்ள மகனே, நீயே விரும்பிய துன்பத்தை உனக்கு இப்பூவுலகு
ஊட்ட, நீயோ மேலுலகம் விரும்பிய நலங்களையெல்லாம் இப்பூவுலத்திற்குச்
செறிவாக ஊட்டி, தீமையே நாடும் இயல்புள்ள பாவங்களையெல்லாம்
அழிப்பாய் என்றாள்.

     நீ, மீ, தீ என்பன எதுகைப் பொருட்டு, நீய், மீய், தீய் என வந்தன.