பக்கம் எண் :

முதற் காண்டம்617

அன்பு உறக் கடல் என்று எலா உயிர் ஆண்டு அளித்து
                                அருள் நாயகி,
துன்புறத் துணை ஆய மாண்பு அருள் துற்று மார்பு
                                உடை மாதவன்
இன்புறத் துணை ஆதல் ஆம் என, "இன்று எழுந்து
                                உறை நாதனை
உன் புறத்து இடை ஏந்துக" என்று, அலர் ஒத்த செங்
                                கரம் நீட்டினாள்

     அன்பு காட்டுதலில் கடல் என்று சொல்லும் வண்ணம் எல்லா
உயிர்களையும் ஆண்டு காத்தருளும் தலைவியாகிய மரியாள், தான் துன்புற்ற
காலத்தில் துணையாகிய மாண்புள்ள கருணை பொருந்திய நெஞ்சம் கொண்ட
பெருந் தவத்தோனாகிய சூசை, தான் இன்புற்ற காலத்திலும் துணையாய்
அதனைப் பகிர்ந்து கொள்ளுதல் பொருத்தமாகுமென்று உணர்ந்து,
"இப்பொழுது பிறந்து வந்து என் கையில் தங்கியுள்ள ஆண்டவனை நீயும்
உன் கையிடத்து எந்திக் கொள்வாயாக" என்று கூறி, மலர் போன்ற தன்
செங்கையால் நீட்டிக் கொடுத்தாள்.

     'ஏந்துகவென்று' எனற் பாலது, 'ஏந்துகென்று' என வந்தது தொகுத்தல்
விகாரம்.
 
                    127
விட்பு லத்துய ரேக வாணையின் வேந்தர் வேந்தெனுந்
                                         தேவனை
யுட்பு லத்துவ ணக்க மிக்குற வுற்றெ டுத்திட நாணினான்
மட்பு லத்திணை யற்ற மாதறை வாய்ந்த சொற்கொடு
                                         தேறினன்
கட்பு லத்துறு மாரி யோடிரு கைத்த லங்களி லேந்தினான்.
 
விண் புலத்து உயர் ஏக ஆணையின் வேந்தர் வேந்து எனும்
                                         தேவனை,
உள் புலத்து வணக்கம் மிக்கு உற, உற்று எடுத்திட நாணினான்,
மண் புலத்து இணை அற்ற மாது அறை வாய்ந்த சொல் கொடு
                                         தேறினன்;
கண் புலத்து உறு மாரியோடு, இரு கைத் தலங்களில் ஏந்தினான்.