பக்கம் எண் :

முதற் காண்டம்625

கூவி அழைத்த இளமை வாய்ந்த மாமரத்துக் குயில்களே, விளைந்த தேன்
போன்ற பாடல்களைப் பாடுங்கள்!
 
                     138
கண்பட் டுறங்கக் கண்டேனோ கருணா கரனே களிக்கடலே
புண்பட் டுளையு நெஞ்சிற்கோர் பொருவா மருந்தே
                                    யருளன்பே
மண்பட் டலையுங் கடலன்ன மருளென் னெஞ்சிற்
                                    குயிர்நிலையே
யெண்பட் டுயர்ந்த செல்வரசே யெம்மே லிரங்குந்
                                    தயையிதுவோ.
 
"கண் பட்டு உறங்கக் கண்டேனோ! கருணாகரனே, களிக் கடலே,
புண் பட்டு உளையும் நெஞ்சிற்கு ஓர் பொருவா மருந்தே, அருள்
                                          அன்பே,
மண் பட்டு அலையும் கடல் அன்ன மருள் என் நெஞ்சிற்கு உயிர்
                                          நிலையே,
எண் பட்டு உயர்ந்த செல்வ அரசே, எம் மேல் இரங்கும் தயை
                                          இதுவோ!

     "நீ கண்களை மூடி உறங்க நான் காணும் பேறு பெற்றேனோ!
கருணைக்கு இருப்பிடமானவனே, மகிழ்ச்சிக் கடலே, புண்பட்டு வருந்தும்
நெஞ்சிற்கு ஓர் ஒப்பற்ற மருந்தே, அருள் சார்ந்த அன்பு வடிவமே,
மண்ணுலகைச் சூழ்ந்து அலை மோதும் கடல் போல மயங்கும் என்
நெஞ்சிற்கு உயிர்நாடி போன்றவனே, எண்ணுக்கு அடங்காது உயர்ந்த
செல்வம் கொண்ட அரசனே, நீ எம் மீது இரங்கிச் செய்யும் அன்புச்
செயல் இதுவோ!

     செல்வரசே - செல்வ அரசே என்பதன் தொகுத்தல் விகாரம்

                      139
வான்றோய் நயங்கள் பயந்தோய் நீ மண்டோய் துயர்நீத்
                                    தளித்தோய்நீ
தேன்றோ யின்பத் தமைந்தோய் நீ சேண்மேற் புகழப்
                                    படுவோய்நீ
நான்றோ யுணர்வி னுயர்ந்தோய்நீ நானென்றாக வவதரித்தே
யூன்றோ யுடல் கொண் டனவன்பி னுணர்விட் டெனக்குப்
                                    பணியாயோ.