"வான் தோய்
நயங்கள் பயந்தோய் நீ; மண்தோய் துயர்நீத்து
அளித்தோய் நீ;
தன் தோய் இன்பத்து அமைந்தோய் நீ; சேண்மேல்
புகழப்படுவோய் நீ;
நான் தோய் உணர்வின் உயர்ந்தோய் நீ; நான் என்று ஆக
அவதரித்தே,
ஊன் தோய் உடல் கொண்டன அன்பின் உணர்வு இட்டு,
எனக்குப் பணியாயோ! |
"வானுலகில்
பொருந்தியுள்ள இன்பங்களையெல்லாம் படைத்துத்
தந்தவனும் நீயே; மண்ணுலகிற் பொருந்தியுள்ள துயரங்களையெல்லாம்
போக்கிக் காத்தவனும் நீயே; தேனில் தோய்ந்ததுபோன்ற பேரின்பத்தோடு
இயல்பாய் அமைந்திருப்பவனும் நீயே; வானுலகில் எப்பொழுதும்
புகழப்படுபவனும் நீயே; நான் கொள்ளக்கூடுமான உணர்வுகளுக்கெல்லாம்
அப்பால் உயர்ந்து நிற்பவனும் நீயே; என்னைப்போல் மனிதன் ஆக
வேண்டுமென்று அவதரித்து, ஊனாலாகிய உடலை எடுத்துக் கொண்டு
இவ்வுலகில் தோன்றிய உன் அன்பு பற்றிய உணர்வை எனக்குத் தந்து,
நான் செய்ய வேண்டியவற்றை எனக்குக் கட்டளையிட்டருள மாட்டாயோ!
'நானென்றாக'
என்றவிடத்து 'நான்' என்பது, முன் 7ஆவது
ஐயந்தோற்று படலம், 23ஆம் பாடலில், 'நானென வாயினானே'
என்றவிடத்துப்போல, 'மனிதன்' என்ற பொருளில் நின்றது. "அதனால்தான்
உலகிற்கு வரும்போது கிறிஸ்து, 'பலியோ, காணிக்கையோ, நீர்
விரும்பவில்லை. ஆனால், எனக்கு ஓர் உடலை அமைத்தளித்தீர். தகனப்
பலிகளோ' பாவப் பரிகாரப் பலிகளோ, உமக்கு உகந்தவையாய் இல்லை.
அப்பொழுது நான் கூறியது: இதோ! இறைவா, உம் திருவுளத்தை நிறைவேற்ற
வந்துவிட்டேன்...' என்கிறார்" (எபி. 10 : 5 - 7).
140 |
கோவீற்
றிருந்து மகிழ்வோய்நீ குலையா வயத்தொப்
பிகழ்ந்தோய்நீ
நாவீற் றிருந்த புகழ்மிக்க நணுகாக் காட்சிக் கிறையோய்நீ
பூவீற் றிருந்து நாம்வாழப் பூவந் திடருற் றழுவோய்நீ
யாவீற் றிராயோ வென்னிதயத் ததற்கே யுறுதி புரியாயோ. |
|