பக்கம் எண் :

முதற் காண்டம்628

     "நூல்களில் பேசப்படும் புகழுக்கெல்லாம் மேலாக உயர்ந்து நின்றவனும்
நீ; நோயுற்றவிடத்து மருந்து போலக் கனிபனும் நீ; செங்கோலிடத்து
வளையாத நீதி நெறியைக் கொண்டிருந்து எல்லா உலகங்களையும்
ஆண்டவனும் நீயே; இத்தகைய நீ வேலின் வசமாய் உதிரம் சிந்தி
இறக்கவென்றே உடலெடுத்துப் பிறந்தாயோ? இதை அறியாமல், காற்றில்
அகப்பட்ட இலை போல் கலங்கிய என் மனத்திற்கு நல்லுணர்வுகளை
உணர்த்த மாட்டாயோ?
 
                     142
நீர்பா யுலகிற் குயிரோய்நீ நிமிர்வீட் டுலகிற் குயிரோய்நீ
சீர்பாய் பாவிற் குறையோய்நீ திறன்கொண் டாள்வார்க்
                                  கடலோய்நீ
யேர்பா யிரவிக் கொளியோய்நீ யெம்மே லிரங்கிப்
                                  பிறந்தனைநாஞ்
சூர்பாய் துகளற் றுய்வதற்குன் றுணைத்தா டொழும்பண்
                                  புரையாயோ.
 
"நீர் பாய் உலகிற்கு உயிரோய் நீ; நிமிர் வீட்டு உலகிற்கு
                          உயிரோய் நீ;
சீர் பாய் பாவிற்கு உரையோய் நீ; திறன் கொண்டு
                          ஆள்வோர்க்கு அடலோய் நீ;
ஏர் பாய் இரவிக்கு ஒளியோய் நீ; எம் மேல் இரங்கிப்
                          பிறந்தனை.நாம்
சூர் பாய் துகள் அற்று உய்வதற்கு உன் துணைத் தாள் தொழும்
                          பண்பு உரையாயோ?

     "கடல் சூழ்ந்த இம்மண்ணுலகிற்கு உயிராய் இருப்பவனும் நீ; உயர்ந்த
மோட்ச உலகத்திற்கு உயிராய் இருப்பவனும் நீ; சீரால் தொடுக்கப்பட்ட
செய்யுளுக்கு விளக்கவுரை போல் இருப்பவனும் நீ; நீதித் திறம் கொண்டு
ஆளும் அரசர்க்கு வலிமையாய் இருப்பவனும் நீ; அழகு பரந்த பகலவனுக்கு
ஒளியாய் அமைந்தவனும் நீ; அத்தகைய நீ எம்மீது இரக்கங் கொண்டு
மனிதனாய்ப் பிறந்துள்ளாய். துன்பம் எம்மைத் தாக்குவதற்குக் காரணமான
பாவங்களை நாங்கள் ஒழித்து வாழ்வதற்கு உன் இரு திருவடிகளையும்
தொழுவதற்குரிய இயல்பை எடுத்துக் கூற மாட்டாயோ?