பக்கம் எண் :

முதற் காண்டம்629

                      143
தேறுந் தயையின் முனிவோய்நீ சினத்திற் கருள்செய்
                                   கனிவோய்நீ
கூறுங் கலையற் றுணர்வோய்நீ கூறுந் தொனியற்
                                   றுரைப்போய்நீ
மாறும் பொருள்யா விலுநின்றே மாறா நிலைகொள் மரபோய்நீ
யீறுந் தவிர்ந்துன் புகழ்க்கடலாழ்ந் தெனக்கே கரைகாட்
                                   டருளாயோ.
 
"தேறும் தயையின் முனிவோய் நீ; சினத்திற்கு அருள் செய்
                                      கனிவோய் நீ;
கூறும் கலை அற்று உணர்வோய் நீ; கூறும் தொனி அற்று
                                   உரைப்போய் நீ;
மாறும் பொருள் யாவிலும் நின்றே, மாறா நிலை கொள் மரபோய் நீ;
ஈறும் தவிர்ந்த உன் புகழ்க் கடல் ஆழ்ந்த எனக்கே கரை காட்ட
                                      அருளாயோ?

     "தெளிவிக்க வேண்டுமென்ற தயவின் பொருட்டுச் சினந்து
கொள்பவனும் நீ; தெளிந்த பின், முந்திய சினத்தின் அளவாக அருள்
செய்யும் கனிவு கொண்டவனும் நீ; பிறர் சொல்லித் தரும் கல்வி இன்றியே
எல்லாம் உணர்பவனும் நீ; நாவால் கூறும் ஓசை இல்லாமலே பேசுபவனும்
நீ; மாறும் இயல்புள்ள பொருள்கள் யாவற்றிலும் நிலை கொண்டிருந்தும்,
அவை மாறும் போதும் தான் மாறாமல் நிலை கொள்ளும் இயல்புள்ளவனும்
நீ; முடிவே இல்லாத உன் புகழாகிய கடலுள் ஆழ்ந்துள்ள எனக்கு அதன்
கரையைக் காட்டவும் அருள் கொள்ள மாட்டாயோ?

     தவிர்ந்தவுன், ஆழ்ந்தவெனக்கே, காட்டவருளாயோ என்பன,
தொகுத்தல் விகாரமாய், முறையே, தவிர்ந்துன், ஆழ்ந்தெனக்கே,
காட்டருளாயோ என வந்தன.
 
                    144
ஒளிநாக் கொடுவான் சுடர்புகழ வொளிநாக் கொடுபன்
                                   மணிபுகழக்
களிநாக் கொடுபற் புள்புகழக் கமழ்நாக் கொடுகா மலர்புகழத்
தெளிநாக் கொடுநீர்ப் புனல்புகழத் தினமே புகழப் படுவோய் நீ
யளிநாக் கொடுநா னுனைப்புகழ வறியா மூகை யுணர்த்தாயோ.